கொலை வழக்கில் கணவன்-மனைவிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


கொலை வழக்கில் கணவன்-மனைவிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 25 April 2018 4:15 AM IST (Updated: 25 April 2018 2:53 AM IST)
t-max-icont-min-icon

கொலை வழக்கில் கணவன்-மனைவிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை, 

நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 27). ரெயில்வேயில் பணியாற்றினார். ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த இவரும், தச்சநல்லூர் சங்கரநாராயணன் மகள் காவேரியும் காதலித்தனர். இதற்கு காவேரியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை மீறி அவர்கள் 3.5.2016 அன்று வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

வண்ணார்பேட்டையில் உள்ள விஸ்வநாதன் வீட்டிற்கு மகளை தேடி சங்கரநாராயணனும், அவருடைய மனைவி செல்லம்மாளும் சென்றனர். அப்போது வீட்டில் விஸ்வநாதனின் சகோதரி கல்பனா, அவருடைய குழந்தையுடன் இருந்தார். இருவரும் கல்பனாவை வெட்டிக்கொலை செய்தனர்.

கணவன்-மனைவிக்கு தூக்கு

இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்-மனைவியை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நெல்லை 2-வது கூடுதல் மாவட்ட செசன்சு கோர்ட்டு கணவன்-மனைவி இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்து 9.1.2017 அன்று தீர்ப்பு வழங்கியது. தூக்கு தண்டனையை ரத்து செய்து, தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி இருவரும் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.விமலா, டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

தண்டனை ரத்து

சங்கரநாராயணனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுகிறது. அவருடைய மனைவி செல்லம்மாள் விடுதலை செய்யப்படுகிறார். இந்த வழக்கில் உயிரிழந்த கல்பனாவின் கணவருக்கு இழப்பீடாக ரூ.8 லட்சத்து 25 ஆயிரத்தை அரசு வழங்க வேண்டும் என்ற நெல்லை கோர்ட்டின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. உயிரிழந்த பெண்ணின் மகனுக்கு 21 வயது ஆகும் வரையிலோ அல்லது அவர் பட்டப்படிப்பை முடிக்கும் வரையிலோ மாதந்தோறும் பராமரிப்பு தொகையாக ரூ.11 ஆயிரத்து 600-ஐயும் அரசு வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Next Story