நீதிபதி பதவிக்கான இலவச பயிற்சி வகுப்பு ஐகோர்ட்டு நீதிபதி தொடங்கி வைத்தார்
சிவில் நீதிபதி பதவிக்கான தேர்வில் பங்கேற்கும் வக்கீல்களுக்கு சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளை, பெண் வக்கீல்கள் சங்கம் இணைந்து நடத்தும் இலவச பயிற்சி வகுப்பை ஐகோர்ட்டு நீதிபதி பவானி சுப்பராயன் தொடங்கிவைத்தார்.
சென்னை,
பெண் வக்கீல்கள் சங்கம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளையின், மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். அகாடமி ஆகியவை இணைந்து, சிவில் நீதிபதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புக்களை நேற்று தொடங்கின.
இதன் தொடக்க விழா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. இதில், ஐகோர்ட்டு நீதிபதி பவானி சுப்பராயன் தலைமை தாங்கி, பயிற்சியை தொடங்கி வைத்தார். அவருக்கு மனிதநேய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் வெற்றி துரைசாமி, பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு வழங்கினார்.
பின்னர் நீதிபதி பேசியதாவது:-
நீதிபதிகள் பதவிக்கான தேர்வில், அந்த காலத்தில் நாங்கள் பங்கேற்றபோது, இதுபோன்ற இலவச பயிற்சி என்ற பொன்னான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது, இந்த வாய்ப்புகள் உங்களுக்கு (வக்கீல்களுக்கு) கிடைத்துள்ளது. இந்த வாய்ப்புகளை இளம் வக்கீல்கள் வீணடிக்காமல், முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஏதோ பயிற்சி வகுப்புக்கு செல்கிறோம் என்ற மனப்பான்மையில் செல்லாமல், முழுமையாக மனதை ஒரு நிலைப்படுத்தி, இந்த தேர்வுக்கு நீங்கள் தயாராக வேண்டும்.
சட்டம் படித்ததற்கும், வக்கீல் தொழில் மேற்கொள்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அதுபோலத்தான் நீதிபதி பணிக்கு தயாராகும் முன்பாக ஒரு வழக்கிற்கான பிரமாண பத்திரத்தை எவ்வாறு தயார் செய்யவேண்டும். அதன் உட்கூறுகள் என்னென்ன?, எவ்வாறு தாக்கல் செய்ய வேண்டும்?, சட்டப்பிரிவுகள் என்ன? போன்றவற்றையும் முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
ஒரு வழக்கின் தீர்ப்பு எவ்வாறு பிறப்பிக்கப்படுகிறது?, அந்த தீர்ப்பில் என்னென்ன முன்மாதிரி தீர்ப்புகள் சுட்டிக் காட்டப்படுகிறது? போன்றவைகளை ஆராய வேண்டும். தன்னுடைய சீனியர் வக்கீல் ஆஜராக முடியவில்லை. வழக்கை தள்ளி வையுங்கள் என்று கேட்பதை மட்டுமே இளம் வக்கீல்கள் தொழிலாக வைத்திருக்கக்கூடாது.
தேர்வு எழுதும்போது சரியான விடைகளை நேரடியாக எழுத வேண்டும். சொல்ல வேண்டிய பிரிவுகளை சுட்டிக் காட்ட வேண்டும். அதேபோல பணம் சம்பாதிப்பதற்காக வக்கீல் தொழிலைச் செய்யாமல், சமுதாயத்திற்கு நம்மால் முடிந்த நல்ல காரியங்களையும், சேவைகளையும் செய்வதற்காக பயன்படுத்த வேண்டும்.
மனிதநேய அறக்கட்டளையும், பெண் வக்கீல்கள் சங்கமும் ஏற்படுத்திக் கொடுத்துள்ள இந்த நல்ல வாய்ப்பை அனைவரும் சிறப்பாக பயன்படுத்தி சிவில் நீதிபதிகள் தேர்வில் வெற்றி பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இவ்வாறு நீதிபதி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மனிதநேய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் வெற்றி துரைசாமி, மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ். அகாடமி கவுரவ இயக்குனர் எம்.கார்த்திகேயன், பெண் வக்கீல் சங்கத் தலைவர் நளினி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story