போலி ஏ.டி.எம். கார்டு மோசடி: புதுவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் கைது
புதுவையில் போலி ஏ.டி.எம். கார்டு மூலம் பலரின் வங்கி கணக்குகளில் பணத்தை மோசடி செய்தது தொடர்பாக அரசு ஆஸ்பத்திரி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி,
புதுவையில் ஏ.டி.எம். மையங்களில் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி பணம் எடுப்பவர்களின் ஏ.டி.எம். கார்டுகளில் உள்ள தகவல்களை திருடி போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து அதன்மூலம் பலரது வங்கி கணக்கில் இருந்து மோசடியாக பணத்தை எடுத்துள்ளனர். இதுதொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி மட்டுமல்லாமல் கடலூர், திண்டிவனம், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் இதுபோல் பலரது வங்கி கணக்குகளில் இருந்து கோடிக்கணக்கில் மோசடியாக பணம் எடுத்து இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக புதுச்சேரியை சேர்ந்த என்ஜினீயர் பாலாஜி, சந்துரு ஆகியோர் முதலில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து போலி ஏ.டி.எம். கார்டுகள், சுவைப்பிங் மெஷின்கள், கம்ப்யூட்டர்கள், செல்போன்கள் மற்றும் நிலப்பத்திரம் என ரூ.31 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அரசு டாக்டர் கைது
அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய சென்னையை சேர்ந்த சரவணன், கடலூரை சேர்ந்த கமல் (28) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாரின் விசாரணையில் புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் மற்றும் லாஸ்பேட்டையை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஆகியோருக்கும், அரசு டாக்டர் ஒருவருக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதை அறிந்த அரசியல் பிரமுகர்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய கிருமாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் டாக்டராக பணியாற்றிவரும் விவேக் ஆனந்தன் (28) என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சுவைப்பிங் மெஷின்கள்
சுவைப்பிங் மெஷின்களை வாங்கிக்கொடுத்து மோசடி கும்பலுக்கு அவர் உதவி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவரிடமிருந்து 3 சுவைப்பிங் மெஷின்கள், ரூ.1½ லட்சம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
விவேக் மருத்துவ பட்டமேற்படிப்பு படிக்க முயற்சி எடுத்துவந்தார். இவரது தந்தை தென்னரசு ஓய்வுபெற்ற வங்கி ஊழியர். டாக்டர் விவேக் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அரசியல் பிரமுகர்களை போலீசார் தொடர்ந்து தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story