கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து: பஸ் சக்கரத்தில் சிக்கி, குழந்தையுடன் தாய் பலி


கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து: பஸ் சக்கரத்தில் சிக்கி, குழந்தையுடன் தாய் பலி
x
தினத்தந்தி 26 April 2018 3:30 AM IST (Updated: 26 April 2018 1:43 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது நேர்ந்த விபத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கி குழந்தையுடன் தாய் பலியானார்.

சிதம்பரம், 

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள அகரம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசமூர்த்தி(வயது 35). தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி ஜான்சி(28). இவர்களது மகள்கள் பிரின்சிகா(7), கனியா(5), ஹரினி(3).

இந்நிலையில் சீர்காழியில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த காதணி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, கணேசமூர்த்தி, ஜான்சி ஆகியோர் தங்களது இளைய மகள் ஹரினியுடன் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சீர்காழிக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து மதியம் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினர்.

குழந்தையுடன் தாய் பலி

சிதம்பரத்தில் கடலூர் ரோட்டில் உள்ள உழவர் சந்தை அருகே சென்றபோது, பின்னால் வந்த அரசு பஸ்சுக்கு வழிவிடுவதற்காக கணேசமூர்த்தி சாலையோரமாக மோட்டார் சைக்கிளை ஒதுக்கினார். அப்போது அவர் நிலைதடுமாறியதால், பின்னால் அமர்ந்திருந்த ஜான்சி தான் கையில் வைத்திருந்த குழந்தை ஹரினியுடன் சாலையில் விழுந்தார். அவர்கள் மீது பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியது.

இதில் அவர்கள் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். கணேசமூர்த்தி சாலையோரமாக மோட்டார் சைக்கிளுடன் விழுந்ததால், அவர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.

பஸ்சை அடித்து நொறுக்கினர்

இந்த நிலையில் விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் ஆத்திரத்தில் அரசு பஸ் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கி ஓடினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் போலீசார் விரைந்து சென்று, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே பொதுமக்கள் அரசு பஸ்சை அடித்து நொறுக்கியதால், சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பஸ்கள் அனைத்தும் மீண்டும் சிதம்பரம் பஸ் நிலையத்துக்கே திருப்பி விட்டனர். பின்னர் ஒரு மணி நேரத்துக்கு பிறகு பஸ்கள் அந்த வழியாக மீண்டும் இயக்கப்பட்டது. 

Next Story