போலீசிடம் இருந்து பதில் வரவில்லை: எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு


போலீசிடம் இருந்து பதில் வரவில்லை: எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 26 April 2018 2:30 AM IST (Updated: 26 April 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை ஐகோர்ட்டு தள்ளிவைத்துள்ளது.

சென்னை, 

நகைச்சுவை நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துகளை தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி.சேகர் மீது, பெண் வன்கொடுமைச் சட்டப்பிரிவு உள்பட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்துள்ளார். அதேபோல, இவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று பத்திரிகையாளர் முரளிகிருஷ்ணன் சின்னத்துரை, ஜெ.கவின்மலர் உள்பட பலர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் வக்கீல் முகமது ரியாஸ், எஸ்.வி.சேகர் தரப்பில் மயிலை சத்தியா, முரளிகிருஷ்ணன் சின்னத்துரை சார்பில் டி.அருண் உள்பட பலர் ஆஜரானர்.

விசாரணையின்போது, ‘இந்த முன்ஜாமீன் மனு குறித்து போலீஸ் தரப்பில் இருந்து எந்த பதிலும் தனக்கு வரவில்லை‘ என்று அரசு தரப்பு வக்கீல் கூறினார்.

இதையடுத்து இந்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை 28-ந் தேதிக்கு (சனிக்கிழமைக்கு) தள்ளிவைத்து நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டார். 

Next Story