அண்ணா அறிவாலயத்தில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு
அண்ணா அறிவாலயத்தில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு நடத்தினார்.
சென்னை,
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் அண்ணா அறிவாலயத்தில் கள ஆய்வு நடத்தி வந்தார்.
மார்ச் மாதம் சட்டசபை கூட்டம் தொடங்கியதால் கள ஆய்வு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து காவிரி பிரச்சினைக்காக தி.மு.க. பல்வேறு கட்ட போராட்டங்களை முன் எடுத்ததால் கள ஆய்வு கூட்டம் நடைபெறவில்லை.
திருவள்ளூர் மாவட்டம்
இந்தநிலையில், தற்போது மீண்டும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நிர்வாகிகளுடன் கள ஆய்வு மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் சென்னை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதி செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள், வட்ட செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று காலை அண்ணா அறிவாலயத்தில் திருவள்ளூர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு செய்தார். கூட்டம் காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தை சேர்ந்த ஊராட்சி, பேரூராட்சி, நகர வார்டு செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், அனைத்து அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். மாலையில் நடந்த கூட்டத்தில் திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
புகார் பெட்டி
கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்த அனைவரின் பேச்சுகளையும் மு.க.ஸ்டாலின் உன்னிப்பாக கவனித்துக்கொண்டார். சில நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொண்டார். கட்சியின் வளர்ச்சி பணிகளுக்காக நிர்வாகிகள் முழு வீச்சில் உழைக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். மேலும் அவர், தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றியை நாம் பெற வேண்டும். மாவட்டங்களில் நிலவும் பிரச்சினைகளை நாம் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும். தொண்டர்களாகிய உங்களுக்கு என்ன குறை இருக்கிறது என்பதை என்னிடம் நேரடியாக தெரிவியுங்கள் என்று தெரிவித்தார்.
கூட்டத்தில் கட்சி பிரச்சினை குறித்து வெளிப்படையாக பேச முடியாதவர்கள், கட்சி வளர்ச்சி பணி குறித்த கருத்துக்களையும், புகார்களையும், குறைகளையும் எழுதி புகார் பெட்டியில் போட்டனர்.
Related Tags :
Next Story