‘தமிழகத்துக்கு பிரதமர் எப்போது வந்தாலும் கருப்புக்கொடி காட்டுவோம்’ காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி
தமிழகத்துக்கு பிரதமர் எப்போது வந்தாலும் அவருக்கு கருப்புக்கொடி காட்டுவோம் என்று காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
ஆலந்தூர்,
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தார். அப்போது சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தமிழக காங்கிரஸ் கட்சி பணிகள் பற்றி என்னிடம் கேட்டார். தமிழகத்திற்கு வருவதாக அவர் ஒத்துக்கொண்டார். இதற்கான தேதி அறிவிக்கப்பட்ட பின் தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடக்கும்.
விஜயகாந்துக்கு என்ன கோபமோ? வருத்தமோ? என்று எனக்கு தெரியாது. எல்லோரும் முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்று ஆசைப்படலாம். ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆகக்கூடாது என்று யாரும் ஜோசியம் சொல்லக்கூடாது. யார் முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டியது மக்கள் தான். அரசியல் கட்சிகள் முடிவு செய்ய முடியாது.
அ.தி.மு.க. இரண்டாக உடைந்து உள்ள நிலையில் நிச்சயமாக தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி பலமாக இருக்கிறது. ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அ.தி.மு.க.வும், பாரதீய ஜனதா கட்சியும் கூட்டணியாக தான் செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் பாரதீய ஜனதா ஆட்சியின் பினாமியாக தான் செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.
தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட 9 கட்சிகள் சேர்ந்து காவிரி பிரச்சினைக்காக நடத்திய கூட்டத்தில் பிரதமரை சந்திக்க வேண்டி ஸ்டாலின் கடிதம் எழுதினார். பிரதமர் நேரம் ஒதுக்கி தர வேண்டும். அப்படி நேரம் ஒதுக்கி தரவில்லை என்றால் பிரதமர் எப்போதெல்லாம் தமிழகம் வருகிறாரோ? அப்போதெல்லாம் எங்களது எதிர்ப்பை காட்டுகின்ற வகையில் கருப்பு கொடியை தொடர்ந்து காட்டுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story