கவர்னர்கள் மாநாட்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தினேன் கவர்னர் பேட்டி


கவர்னர்கள் மாநாட்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தினேன் கவர்னர் பேட்டி
x
தினத்தந்தி 25 April 2018 11:45 PM GMT (Updated: 25 April 2018 9:42 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கவர்னர்கள் மாநாட்டில் வலியுறுத்தியதாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், ‘தினத்தந்தி’க்கு அளித்த சிறப்பு பேட்டியின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்கள் வருமாறு:-

கேள்வி:- தமிழகத்தில் தொழில் முதலீடுகளும், தொழில் வளர்ச்சியும் சரிந்து வருகிறது. தமிழகத்தில் தொழில் முன்னேற்றத்துக்கு நீங்கள் என்ன அறிவுரை கூறுகிறீர்கள்?

பதில்:- இது தேசிய அளவில் பிரபலப்படுத்தப்பட வேண்டும். அரசு அதற்கு முயற்சிகள் செய்ய வேண்டும். அவர்கள் செய்கிறார்கள். தற்போது ஒற்றைச்சாளர முறையை அறிமுகம் செய்துள்ளனர். முன்பிருந்த முறையைவிட, தொழில் தொடங்குவதற்கான எளிய முறையாகவும் சிறப்பானதாகவும் இது காணப்படுகிறது. அரசின் நல்ல முயற்சி இது. இதை இன்னும் வலுப்படுத்த வேண்டும். அதுபற்றி இந்தியாவில் உள்ள தொழிலதிபர்கள் நன்றாக தெரிந்துகொள்ளும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும்.

டெல்லியில் இதைச் செய்ய வேண்டும். தமிழக அரசும் தொழில் அதிபர்களை அழைத்துப் பேச வேண்டும். தமிழ்நாட்டில் தொழில் தொடங்கினால் அரசு அளிக்கும் சலுகைகள், உள்கட்டமைப்பு வசதிகள் பற்றி எடுத்துக் கூற வேண்டும்.

உதாரணமாக, இங்கு நடந்த ராணுவ கண்காட்சிக்கு மிகப் பெரிய வரவேற்பு இருந்தது. அருமையான கண்காட்சி அது. மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமனை பாராட்டினேன். அதுபோன்ற நடவடிக்கைகளை மாநில அரசும் மேற்கொண்டு அதிக முயற்சிகளை செய்ய வேண்டும்.

தமிழகத்துக்காக பேசுகிறேன்

கேள்வி:- நீங்கள் பதவி ஏற்ற நாளில், மத்திய அரசில் உங்களுக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள், அவர்களை சந்தித்துப் பேசி தமிழகத்துக்கு நன்மை பயக்கும் திட்டங்களை கொண்டு வருவேன் என்று உறுதி அளித்தீர்கள். அதன்படி டெல்லியில் உள்ள தலைவர்களிடம் தமிழகத்துக்காக பேசி இருக்கிறீர்களா?

பதில்:- மத்திய மந்திரி நிதின் கட்காரி எனது நண்பர். அவர் இங்கு வந்திருந்தார். அப்போது அவரிடம் கோரிக்கை விடுத்திருந்தேன். அதன் பேரில் தமிழகத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை மத்திய மந்திரி நிதின் கட்காரி அறிவித்தார். மத்தியில் உள்ள எனது நண்பர்களிடம் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளேன். தமிழக பிரச்சினைகளுக்காக பிரதமர், நிதித்துறை, பாதுகாப்புத் துறை, உள்துறை மந்திரிகளுடன் பேசியிருக்கிறேன்.

காவிரி மேலாண்மை வாரியம்

கேள்வி:- தமிழ்நாட்டில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதுகுறித்து நீங்கள் ஏதாவது முயற்சி எடுத்து இருக்கிறீர்களா? மத்தியில் பேசியிருக்கிறீர்களா?

பதில்:- கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் 12, 13-ந் தேதிகளில் நடந்த கவர்னர்கள் மாநாட்டில் நான் உரையாற்றினேன். அதில், நடுவர் மன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவை உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்று பேசியிருக்கிறேன். இந்த விஷயத்தில் நான் முழுக்கவனம் செலுத்துகிறேன் என்றும் பேசினேன். இதுபற்றி மத்திய நீர் ஆதாரத் துறை மந்திரி என்னிடம் பேசும்போது, அவை உருவாக்கத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், இந்த பிரச்சினையில் தனது துறை அதிகாரிகள் பணியாற்றி வருவதாகவும் கூறினார். 

Next Story