மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்தும் பணியாளர்களுக்கு மறைமுக மிரட்டல் டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு


மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்தும் பணியாளர்களுக்கு மறைமுக மிரட்டல் டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 26 April 2018 8:47 PM GMT (Updated: 26 April 2018 8:47 PM GMT)

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்தும் பணியாளர்களுக்கு மறைமுக மிரட்டல் விடுக்கப்படுவதாக டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாணவிகளுக்கு பாலியல் வலை வீசிய வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் உள்ளிட்டோருக்கு எதிராக ஏராளமான ஆதாரங்கள் வெளியாகிவரும் நிலையில், அதற்குக் காரணமான பல்கலைக்கழக பணியாளர் சங்க நிர்வாகிகள் பழிவாங்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த விஷயத்தில் அநீதிக்கு எதிராகப் போராடும் பணியாளர்களுக்கு மறைமுக மிரட்டல் விடுக்கப்படுகிறது. இந்த அடக்குமுறை கண்டிக்கத்தக்கதாகும்.

பல்கலைக்கழக கூட்டு நடவடிக்கை குழுவின் போராட்டத்தில் பாலியல் சர்ச்சை குறித்த ஆதாரங்கள் மட்டுமின்றி, பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் ஊழல்கள், தகுதியற்ற நியமனங்கள் உள்ளிட்ட முறைகேடுகள் குறித்த ஆதாரங்களும் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

அதுமட்டுமின்றி, காமராஜர் பல்கலைக்கழகத்தை ஊழல்வாதிகளின் பிடியில் இருந்து மீட்பதற்காக ‘சேவ் எம்.கே.யு.’ இயக்கமும் எழுச்சியுடன் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனால், தமது பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சும் துணைவேந்தர் பி.பி.செல்லத்துரை, அதைத் தடுப்பதற்காகவே போராட்டங்களை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, போராட்டத்தை முன்னெடுக்கும் பேராசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ஆகியோரை துணைவேந்தரின் ஆட்கள் தனித்தனியாக தொடர்பு கொண்டு மிரட்டல் விடுப்பதாகவும், போராட்டக்காரர்களை எப்படி ஒடுக்குவது என்பது தமக்குத் தெரியும் என்று துணைவேந்தர் செல்லத்துரை கூறிவருவதாகவும் கூறப்படுகிறது.

எனவே, காமராஜர் பல்கலைக்கழகத்தின் பெயரையும், புகழையும் மீட்பதற்காக போராடுவோருக்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வழக்கின் விசாரணை முடிந்து குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை துணைவேந்தர் பதவியில் இருந்து செல்லத்துரையை நீக்கிவைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story