குட்கா ஊழல் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


குட்கா ஊழல் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 27 April 2018 12:15 AM GMT (Updated: 26 April 2018 10:20 PM GMT)

அமைச்சர், டி.ஜி.பி., முன்னாள் போலீஸ் கமிஷனருக்கு எதிரான குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய அனுமதித்ததாகவும், இதற்காக கோடிக்கணக்கான பணம் லஞ்சம் பெற்றதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை தமிழகத்தில் விற்பனை செய்ய கடந்த 2013-ம் ஆண்டு, அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா தடைவிதித்து உத்தரவிட்டார். ஆனால் இது தொடர்பான அறிவிப்பாணை கடந்த 2015-ம் ஆண்டுதான் அரசிதழில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், சென்னை புறநகரில் உள்ள எம்.டி.எம். என்ற பான்மசாலா நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு கிடங்கில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது ரூ.250 கோடி அளவுக்கு அந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட டைரி மூலமாக, தடை செய்யப்பட்ட குட்காவை தமிழகத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு கோடிக்கணக் கான பணம் லஞ்சம் கொடுக் கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, இதுகுறித்து ஓய்வுபெற்ற நீதிபதி மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது, குட்கா ஊழல் தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரித்து வருவதாகவும், அதனால் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற தேவையில்லை என்றும் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயணன் வாதிட்டார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் பி.வில்சன் வாதாடுகையில், “சுகாதாரத்துறை அமைச்சருக்கும், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் இந்த முறைகேட்டில் தொடர்புள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. பல மாநில அதிகாரிகளுக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பு இருக்கிறது. எனவே இந்த வழக்கை மாநில லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. அதனால், சி.பி.ஐ. விசாரித்தால் தான் உண்மை வெளியே வரும்” என்று கூறினார்.

இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய கலால் வரித்துறை சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கடந்த 3 ஆண்டுகளில் டெல்லியில் உற்பத்தி செய்யப்பட்ட குட்கா பொருட்கள் சட்டவிரோதமாக தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு உள்ளது என்றும், இதற்காக ஹவாலா முறையில் பணப்பரிமாற்றம் நடந்து இருக்கிறது என்றும், இதில் பல கோடி ரூபாய்க்கு வரிஏய்ப்பு நடந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதேபோல் வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு முதன்மை இயக்குநர் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறி இருந்ததாவது:-

மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா ஆகியோர் பங்குதாரராக உள்ள நிறுவனத்தின் குட்கா கிட்டங்கி செங்குன்றத்தில் உள்ளது. இங்கு கடந்த 2016-ம் ஆண்டு சோதனை நடத்தினோம்.

அப்போது, புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக அமைச்சர், போலீஸ் அதிகாரிகள் கோடிக்கணக்கான பணம் லஞ்சம் வாங்கியதற்கான ஆவணங்கள் சிக்கின. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க தமிழக தலைமைச் செயலாளர், தமிழக டி.ஜி.பி., ஆகியோருக்கு தனித்தனியாக ரகசிய கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. 2016-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரூ.56 லட்சம் லஞ்சமாக கொடுத்ததாக மாதவராவ் விசாரணையின் போது தெரிவித்தார்.

இந்த நிலையில் 2017-ம் ஆண்டு நவம்பர் 17-ந்தேதி போயஸ் கார்டனில் வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது, குட்கா ஊழல் தொடர்பாக டி.ஜி.பி., முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வருமான வரித்துறை அனுப்பிய ரகசிய கடிதம், வி.கே.சசிகலா அறையில் இருந்து கைப்பற்றப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சருக்கு லஞ்சம் கொடுத்ததை ‘எச்.எம்’ என மாதவராவ் தனது ஆவணத்தில் குறிப்பிட்டு உள்ளார். எங்களுக்கு கிடைத்த ஆவணங்களை மாநில லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளோம்.

இவ்வாறு அவர் தனது பதில் மனுவில் கூறி இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் கடந்த ஜனவரி 30-ந்தேதி தீர்ப்பை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பு வழங்கினார்கள். அப்போது, குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அவர்கள் அதிரடி உத்தரவிட்டனர். நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

சர்வதேச அளவில் 2009-2010-ம் ஆண்டுகளில் நடந்த ஆய்வில், இந்தியாவில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 34 சதவீதம் பேர் புகையிலைக்கு அடிமையாகி உள்ளனர் என்று தெரியவந்து உள்ளது. இதுமட்டுமல்ல, இந்தியாவில் 20.06 கோடி மக்கள் உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய புகையிலை பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர் என்றும் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதனால், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கும் தடை விதிக்கும்படி அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும், மத்திய அரசு கடந்த 2012-ம் ஆண்டு கடிதம் அனுப்பியது. அதன்படி தமிழகத்தில் தடைவிதிக்கப்பட்டது.

ஆனாலும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தமிழகத்தில் தாராளமாக விற்பனை செய்யப்படுவதாகவும், பல மாநிலங்களில் இதுபோல சட்டவிரோதமாக குட்கா விற்பனை நடந்துள்ளது என்றும் மனுதாரர் தரப்பில் நிரூபிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற சட்டவிரோத செயல்களை கண்டுகொள்ளாமல், கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது.

எனவே, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களின் சட்டவிரோத விற்பனையை தடுக்க நியாயமான, பாரபட்சம் இல்லாத விசாரணை தேவை. குற்றம் செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. மத்திய, மாநில அரசுகளின் தொடர்பில்லாமல் குட்கா போன்ற புகையிலை பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை நடைபெற சாத்தியமில்லை.

பல மாநிலங்களை கடந்து இந்த புகையிலை பொருட்கள் வருவதாலும், மத்திய, மாநில அரசு அதிகாரிகளின் தொடர்பு இருப்பதாலும், இதுகுறித்து தன்னிச்சையான அமைப்பு விசாரணை மேற்கொள்வது அவசியம் என்று நாங்கள் கருதுகிறோம்.

எனவே, மத்திய அரசு அதிகாரிகள் மட்டுமல்லாமல், மாநில அரசு அதிகாரிகளுக்கு எதிராகவும் விசாரணையை விரிவுபடுத்த சி.பி.ஐ.க்கு தான் முழு அதிகாரம் உள்ளது.

மாநில அரசு அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மாநில போலீசார் விசாரிக்கலாம். ஆனால், இந்த முறைகேட்டில் மத்திய அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது. சட்டவிரோத குட்கா விற்பனையில் மத்திய கலால் வரி, வருமான வரி, உணவு பாதுகாப்பு சட்டங்கள் மீறப்பட்டுள்ளன. எனவே, சி.பி.ஐ. மட்டுமே இந்த குற்றச்சாட்டுக்களை முழுமையாக விசாரிக்க முடியும்.

இந்த வழக்கில், தமிழக போலீஸ் குறித்தும், வேறு நபர்கள் குறித்தும் எந்த ஒரு கருத்தையும் நாங்கள் கூறவில்லை. குட்கா ஊழல் வழக்கில் மாநில போலீசார் இதுவரை எந்த மாதிரியான விசாரணையை செய்தனர் என்பது குறித்து ஆய்வு செய்யவும் நாங்கள் விரும்பவில்லை.

குற்றச்சாட்டுகளில் சிக்கும் போலீஸ் உயர் அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்படும் என்ற நம்பிக்கை பொதுமக்கள் மத்தி யில் ஏற்படவேண்டும். இதில் பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு விடக்கூடாது.

இந்த வழக்கை பொறுத்தவரை, மனுதாரர் சொந்த நலனுக்காக போராடவில்லை. பொதுநலனுக்காகத்தான் இந்த பொதுநல வழக்கை அவர் தொடர்ந்து உள்ளார். எனவே, குட்கா போன்ற புகையிலை பொருட்களை உற்பத்தி செய்தது, விற்பனை செய்தது உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் சி.பி.ஐ. போலீசாரால் மட்டுமே விசாரிக்க முடியும். எனவே, சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிடுகிறோம்.

இந்த விசாரணைக்கு தேவையான ஒத்துழைப்பை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழங்க வேண்டும். அதேநேரம், தமிழகம் மட்டுமல்லாமல், புதுச்சேரி மாநிலத்தில் நடந்துள்ள குட்கா முறைகேடு குறித்தும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.

இந்த குட்கா ஊழல் விவகாரத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, உடந்தையாகவோ இருந்த யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். குட்கா ஊழல் என்பது சமுதாயத்துக்கு எதிராக நடந்த குற்றமாகும்.

பொதுமக்களின் நலனுக்கு கேடு விளைவிக்கும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுத்து சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பது மட்டுமல்லாமல், பொதுமக்கள் மனதில் பாரபட்சமற்ற ஒரு விசாரணை நடைபெற்றுள்ளது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும்.

இந்த வழக்கினை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவதால், மாநில அரசு மற்றும் மாநில போலீசாரை குறைத்து மதிப்பிட்டதாக கருதக்கூடாது. இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

நீதிபதிகளின் தீர்ப்பு 88 பக்கங்களை கொண்டதாக இருந்தது. 

Next Story