திருவண்ணாமலையில் 20 குழந்தைகள் கடத்தப்படுவதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியவர் கைது
திருவண்ணாமலையில் 20 குழந்தைகள் கடத்தப்படுவதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய வீரராகவன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை
தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் குழந்தைகளை கடத்தும் வட மாநில கும்பல்களின் நடமாட்டம் இருப்பதாக கடந்த சில நாட்களாக வதந்திகள் பரவி வருகின்றன.
சமூக வலைத்தளமான வாட்ஸ்-அப், முகநூல் போன்றவற்றில் பரவும் இந்த வதந்திகளால் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் வடமாநிலங்களைச் சேர்ந்த பலர் சந்தேகத்தின் பேரில் பொதுமக்களால் தாக்கப்பட்டு உள்ளனர். இதுபோன்ற தாக்குதல்கள் அந்த மாவட்டங்களில் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், குழந்தைகளை கடத்த வந்தவர்கள் என்று கருதி சென்னையில் இருந்து கோவிலுக்கு சென்றவர்களை கிராம மக்கள் சரமாரியாக அடித்து உதைத்து தாக்கியதும், இதில் ருக்மணி என்ற மூதாட்டி பலியான சம்பவமும் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்தது.
அந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் திருவள்ளூரில் குழந்தை கடத்த வந்தவர் என கருதி மனநோயாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குழந்தை கடத்தல் தொடர்பாக வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்புவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என போலீஸார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலையில் 20 குழந்தைகள் கடத்தப்படுவதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய வீரராகவன் என்பவரை போலீசார் கைது செய்தனர். வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய புரிசை கிராமத்தை சேர்ந்த வீரராகவனை அனக்காவூர் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story