தஞ்சை விமானப்படை தளத்தை முற்றுகையிட முயன்ற 370 பேர் கைது பிரதமர் நரேந்திரமோடி, ராகுல்காந்தி உருவப்படம் எரிப்பு
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கக்கோரி தஞ்சை விமானப்படை தளத்தை முற்றுகையிட முயன்ற பெண்கள் உள்பட 370 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்,
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கக்கோரி தஞ்சை விமானப்படை தளத்தை முற்றுகையிட முயன்ற பெண்கள் உள்பட 370 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதமர் நரேந்திரமோடி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோரின் உருவப்படம் எரிக்கப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும், தீபக்மிஸ்ரா ஆணையம் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு முரணாக வழங்கியுள்ள தீர்ப்பை மாற்றிட சுப்ரீம் கோர்ட்டு அரசமைப்பு ஆணையம் அமைக்க தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை விமானப்படை தளத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என காவிரி உரிமை மீட்புக்குழுவினர் அறிவித்து இருந்தனர்.
அதன்படி தஞ்சை மேலவஸ்தாசாவடி ரவுண்டானாவில் இருந்து காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் பல்வேறு அமைப்பை சேர்ந்த பெண்கள் என 300-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக புறப்பட்டு பல்வேறு கோஷங்களை எழுப்பியபடி தஞ்சை விமானப்படை தளத்தை நோக்கி சென்றனர்.
தஞ்சை-திருச்சி பைபாஸ் சாலையை கடந்து ஊர்வலம் சென்றபோது, சாலையின் குறுக்கே இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகளை போலீசார் ஏற்படுத்தி இருந்ததால் அதற்கு மேல் ஊர்வலமாக சென்றவர்களால் செல்ல முடியவில்லை. மேலும் போலீசார், ஊர்வலமாக சென்றவர்களை கைது செய்ய முயற்சி மேற்கொண்டனர்.
இதையடுத்து, போராட்ட குழுவினர் அனைவரும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்ய முயற்சி செய்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்ட குழுவினருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.
பின்னர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்ததுடன், போலீசாரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது சிலர் பிரதமர் நரேந்திரமோடி, தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோரின் உருவம் பொறித்து இருந்த பேனரை தீவைத்து எரிந்தனர். போலீசார் உடனடியாக தீயை அணைத்து பேனரை கைப்பற்றினர்.
அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 36 பெண்கள் உள்பட 370 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதற்கிடையே, போராட்டம் நடந்தபோது புதுக்கோட்டை பகுதியில் இருந்து தஞ்சையை நோக்கி ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக வந்தது. இதை பார்த்த போலீசார் எந்த தடையும் இன்றி ஆம்புலன்ஸ் செல்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.
Related Tags :
Next Story