கமல், ரஜினி அரசியலுக்கு வருவதை நாங்கள் எதிர்க்கிறோம் வேல்முருகன் பேட்டி
கமல், ரஜினி அரசியலுக்கு வருவதை நாங்கள் எதிர்க்கிறோம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறினார்.
கோபி,
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று கோபி வந்தார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் குறித்த வழக்கின் முக்கிய விசாரணை நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. தமிழகத்துக்கு பாதகமாக காவிரி வழக்கில் தீர்ப்பு வந்தால் நாங்கள் அதை ஏற்க மாட்டோம். தமிழக விவசாயிகளின் உரிமைகள் பாதிக்காத அளவுக்கு தமிழக அரசின் நடவடிக்கை இருக்க வேண்டும். சி.பி.எஸ்.இ. மாணவர்களை திருப்திபடுத்தவே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை.
எம்.எஸ்., எம்.டி. மருத்துவ உயர் படிப்புகளில் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை. இதை ரத்து செய்த மத்திய அரசை கண்டிக்கிறோம். கல்வி, சுங்கவரி, வரிவிதிப்புகளின் உரிமை தற்போது தமிழ்நாட்டில் மாநில அரசின் கைகளில் இல்லை. அது மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.
கமலும், ரஜினியும் அரசியலுக்கு வருவதை நாங்கள் எதிர்க்கிறோம். நீட் தேர்வு, காவிரி மேலாண்மை வாரியம் போன்ற கொந்தளிக்கும் பிரச்சினைகளுக்கு நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள்?.
அதிக எம்.எல்.ஏக்களை வைத்துக்கொண்டு மு.க.ஸ்டாலின் வெறும் ஆர்ப்பாட்டங்கள் மட்டுமே நடத்திக்கொண்டு இருக்கிறார். அவர் தமிழக மக்களின் நலனுக்காக இன்னும் துணிச்சலான போராட்டங்களில் ஈடுபட வேண்டும்.
சிறிய கட்சியாக இருந்தாலும் நாங்கள் பல போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். கவர்னர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தின் உரிமையை பறிக்கும் அளவுக்கு நடந்து கொள்கிறார். அதை நாங்கள் கண்டிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story