கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருமாவளவன் ஆறுதல் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு


கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருமாவளவன் ஆறுதல் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 13 May 2018 3:45 AM IST (Updated: 13 May 2018 1:33 AM IST)
t-max-icont-min-icon

தேவதானப்பட்டி அருகே கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் ஆறுதல் கூறினார்.

தேவதானப்பட்டி

தேவதானப்பட்டி அருகே கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் ஆறுதல் கூறினார். அப்போது, பெண்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி இந்திராகாலனியை சேர்ந்த வேலு மனைவி வன்னியம்மாள் (வயது 56). இவர், கடந்த 23-ந் தேதி இறந்து விட்டார். அவருடைய உடலை அடக்கம் செய்வதற்காக, மறுநாள் ஊர்வலமாக உறவினர்கள் மயானத்துக்கு எடுத்து சென்றனர்.

வழக்கமாக, மயானத்துக்கு கொண்டு செல்லும் தெருவில் வசிக்கிற மற்றொருவர் ஏற்கனவே இறந்து விட்டார். அவருடைய 16-வது நாள் காரியம் முடியாததால், மாற்றுப்பாதையான பள்ளிவாசல் தெரு வழியாக வன்னியம்மாள் உடலை கொண்டு சென்றனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மோதல் ஏற்பட்டது. இதில், இருதரப்பையும் சேர்ந்த 15 பேர் காயம் அடைந்தனர்.

இந்த நிலையில் கடந்த 5-ந் தேதியன்று மீண்டும் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. இதில் கார், மோட்டார் சைக்கிள், ஆட்டோ தீ வைத்து கொளுத்தப்பட்டன. 50-க்கும் மேற்பட்ட வீடுகள், 15 கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த கலவரத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருதரப்பையும் சேர்ந்த 21 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் நேற்று பொம்மிநாயக்கன்பட்டிக்கு வந்தார். காலை 10.15 மணி அளவில், தனது கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் இந்திராகாலனிக்கு அவர் சென்றார்.

அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் சிலர், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கலவரம் நடந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆனநிலையில் தற்போது தான் வழி தெரிந்ததா? இவ்வளவு நாள் எங்கே சென்றீர்கள்? என்று அவரிடம் கேள்வி கேட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து திருமாவளவனுடன் வந்த தொண்டர்கள், அந்த பெண்களை சமதானப்படுத்தினர்.

அதன்பின்னர், இந்திராகாலனியில் உள்ள சமுதாயக்கூடத்தில் கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அங்கிருந்து பகல் 12.45 மணி அளவில் புறப்பட்ட திருமாவளவன் பள்ளிவாசலுக்கு சென்றார். அங்கு அவரை ஜமாத்தார்கள் வரவேற்றனர். பின்னர், அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து திருமாவளவன் ஆறுதல் கூறினார்.

இதைத்தொடர்ந்து திருமாவளவன் நிருபர்களிடம் கூறும்போது, பொம்மிநாயக்கன்பட்டியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இருதரப்பு மக்களையும் தனித்தனியாக சந்தித்தேன். அவர்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் ஜாமீனில் வெளியே வந்தபிறகு சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.

கலவரம் நடந்த இடத்துக்கு நான் தாமதமாக வந்ததாக கூறுகிறார்கள். நான் வராவிட்டாலும், என்னுடைய கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் இங்கு வந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பல ஊர்களில் தலித் மக்களின் குடிசைகள் எரிக்கப்பட்டு இன்னல்களுக்கு ஆளானார்கள். அங்கெல்லாம் ஆர்வம் காட்டாத சிலர், இந்த ஊர் பிரச்சினையில் மட்டும் ஆர்வம் காட்டுவது ஆச்சரியமாக உள்ளது என்றார்.

Next Story