டி.டி.வி.தினகரனை வழிமறித்து ஆர்.கே.நகர் மக்கள் மீண்டும் போராட்டம்


டி.டி.வி.தினகரனை வழிமறித்து ஆர்.கே.நகர் மக்கள் மீண்டும் போராட்டம்
x
தினத்தந்தி 16 May 2018 4:30 AM IST (Updated: 16 May 2018 3:36 AM IST)
t-max-icont-min-icon

20 ரூபாய் நோட்டை காட்டி ஓட்டுக்கு பணம் தரக்கோரி ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் டி.டி.வி.தினகரனை வழிமறித்து மீண்டும் போராட்டம் நடத்தி கோஷமிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

பெரம்பூர்,

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை- எண்ணூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சமீபத்தில் சுற்றுலாவாக மராட்டிய மாநிலம் புனே சென்றனர். அப்போது புனே அருகில் உள்ள முல்சி அணையில் மூழ்கி தண்டையார்பேட்டையை சேர்ந்த மாணவர்கள் சரவணகுமார், ராஜேஷ், சந்தோஷ் ஆகியோர் இறந்தனர்.

இறந்த மாணவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்து அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டி.டி.வி.தினகரன் நேற்று தண்டையார்பேட்டை வந்தார்.

இது பற்றி தகவல் அறிந்த ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் அங்கு ஒன்று திரண்டனர். அப்போது அவர்கள் இடைத்தேர்தலின் போது கூறியது போல் ஓட்டுக்கு பணம் தரக்கோரி 20 ரூபாய் நோட்டை காட்டி டி.டி.வி.தினகரனை வழிமறித்து கோஷமிட்டனர். அப்போது அங்கிருந்த டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள், போராட்டம் நடத்திய மக்களை விரட்டினர்.

இதை அறிந்த ஆர்.கே.நகர் போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களை சமாதானப்படுத்தினர். இதனால் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் நடத்தியவர்களை அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

ஏற்கனவே ஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்த டி.டி.வி.தினகரனிடம் இதேபோல் அப்பகுதி மக்கள் 20 ரூபாய் நோட்டை காட்டி ஓட்டுக்கு பணம் தரக்கோரி போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கிய பின்னர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் சூழல் உள்ளது. பா.ஜனதா ஆட்சி அமைத்தால் அவர்கள் ஏற்கனவே கூறியபடி தமிழக விவசாயிகளின் கோரிக்கையான காவிரி தண்ணீரை வழங்க வேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை செயல்படுத்த வேண்டியது மத்திய அரசின் தார்மீக கடமை. காவிரி நீர் பங்கீட்டுக்காக மத்திய அரசு அமைக்கும் அமைப்பு சிறப்பாக செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் காவிரிக்காக தமிழகத்தில் தொடர்ந்து போராட வேண்டிய நிலை ஏற்படும்.

சசிகலா நோட்டீஸ் அனுப்பியது, தினகரனின் ‘பிளாக்மெயில்’ என்பது உள்ளிட்ட திவாகரனின் கருத்துகளுக்கு பதில் சொல்லி என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.

காவிரி குறித்த விவாதத்துக்கு கமல்ஹாசன் அழைப்பு விடுத்தார். அதில் பங்கேற்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனினும் எங்கள் கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்.

எஸ்.வி.சேகரை கைது செய்யாமல் ஆட்சியாளர்கள் தான் தற்போது ஒளிந்து கொண்டு உள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story