மாநில செய்திகள்

காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைப்பதா? டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை + "||" + Cauvery Management Authority Structuring Dr Anbumani Ramadoss report

காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைப்பதா? டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை

காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைப்பதா? டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை
எந்த அதிகாரமும் இல்லாத அமைப்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து விடக்கூடாது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற் கான வரைவுத் திட்டத்தின் திருத்தப்பட்ட வடிவத்தை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்திருக்கிறது. மத்திய அரசு அமைக்கவுள்ள புதிய அமைப்புக்கு காவிரி மேலாண்மை ஆணையம் என்று பெயரிடப்படும். காவிரி நீர்ப்பகிர்வு குறித்த சிக்கலில் ஆணையத்தின் முடிவே இறுதியானது. மேலாண்மை ஆணையத்தின் தலைமை அலுவலகம் பெங்களூருவுக்கு பதிலாக டெல்லியில் அமைக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த திருத்தங்கள் அனைத்தும் மத்திய அரசு தானாக முன்வந்து செய்தவை அல்ல. மாறாக, உச்சநீதிமன்ற ஆணைப்படி செய்யப்பட்ட திருத்தங்கள் தான் இவை. இவற்றில் காவிரி ஆணையத்தின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமைக்கப்படுவது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.

மத்திய அரசு அதன் கர்நாடக ஆதரவு நிலைப்பாடு காரணமாக, அந்த மாநிலத்தின் கட்டுப்பாட்டிலேயே கர்நாடக அணைகள் இருக்கும்படி வரைவுத் திட்டத்தை தயாரித்துள்ளது. இப்படி எந்த அதிகாரமும் இல்லாத அமைப்பை உருவாக்கி விட்டு, அதற்கு பெயரை மட்டும் கவர்ச்சிகரமாக சூட்டினால் என்ன பயன்?. அரளிப்பூவுக்கு ரோஜா என்று பெயர் மட்டும் சூட்டினால் அதை எப்படி தலையில் சூட்டிக்கொள்ள முடியாதோ, அதேபோல் தான் புதிய அமைப்புக்கு ஆணையம் என்று பெயர் சூட்டினால் மட்டும் காவிரி நீர் வந்து விடாது.

எனவே, காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளையும் நிர்வகிக்கும் அதிகாரத்துடன் தான் காவிரி ஆணையம் அமைக்கப்பட வேண்டும். இதற்கு குறைவான எந்தவொரு அமைப்பையும் தமிழ்நாடு அரசு ஏற்கக்கூடாது; உச்சநீதிமன்றமும் அதை அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.