காவிரி மேலாண்மை ஆணையம் பற்றி கட்சி தலைவர்கள் கருத்து


காவிரி மேலாண்மை ஆணையம் பற்றி கட்சி தலைவர்கள் கருத்து
x
தினத்தந்தி 18 May 2018 10:30 PM GMT (Updated: 18 May 2018 10:37 PM GMT)

காவிரி வரைவு செயல்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது பற்றி அரசியல் கட்சி தலைவர்கள் கூறி இருப்பதாவது.

சென்னை,

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்- பருவகாலத்திற்கு முன்னதாக காவிரி வரைவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது, தமிழகத்திற்கு கிடைத்த சாதனை வெற்றியாக தே.மு.தி.க. கருதுகிறது.

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்-பன்னெடுங்காலமாக மறுக்கப்பட்ட காவிரி, தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மறுக்கப்பட்ட காவிரி, இன்றைக்கு பா.ஜனதா ஆட்சியில் தமிழகத்திற்கான காவிரி உரிமை மீட்டெடுக்கப்பட்டு இருக்கிறது.

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்- காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளை கட்டுப்படுத்தும் அதிகாரத்துடன் கூடிய காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தான் காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும். எனவே, அதை நோக்கிய சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்-இந்த தீர்ப்பானது தமிழக விவசாயிகளுக்கு கிடைத்திருக்கின்ற நீதி. குறிப்பாக காவிரி நதிநீர் கிடைக்குமா என்று ஏங்கி காத்துக்கிடந்த, வறட்சியின் விளிம்பில் இருந்த விவசாயிகளுக்கு உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பானது வரவேற்கத்தக்கது.

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்- இறுதியான வரைவு திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது வரவேற்கத்தக்கது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்-உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், நதிநீர் பங்கீட்டினை அமல்படுத்தும் முழுப்பொறுப்பு ஆணையத்திற்கே உண்டு என குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் பற்றாக்குறை காலங்களில் கிடைக்கும் நீரை பகிர்ந்துகொள்வதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் இடம்பெறவில்லை. காவிரி பாசனப்படுகையில் புதிய நீர்த்தேக்கங்கள், அணைக்கட்டுகள் ஏற்படுத்த வேண்டுமானால் சம்பந்தப்பட்ட மாநிலம் ஆணையத்தின் அனுமதி பெற்ற பிறகே மேற்கொள்ள வேண்டும் என்ற அழுத்தமான அம்சம் இடம்பெறவில்லை. எனினும் நீண்ட காலமாக நீடித்து வந்த காவிரி பிரச்சினை முடிவுக்கு வந்துள்ள நிலையில் தமிழகமும், காவிரி பாசனப்பகுதியும் சந்தித்த கொடுமையான பாதிப்புகளிலிருந்து விடிவு பெறும் வகையில் மத்திய அரசும், கர்நாடக அரசும் ஆணையத்தின் உத்தரவுகளை செயல்படுத்திட வேண்டும்.

Next Story