நியூஸ்-7 தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழா


நியூஸ்-7 தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழா
x
தினத்தந்தி 20 May 2018 4:00 AM IST (Updated: 20 May 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

நியூஸ்-7 தொலைக்காட்சி சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் ஆர்.நல்லக்கண்ணுவுக்கு தமிழ் ரத்னா விருதை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கி கவுரவித்தார்.

சென்னை,

நியூஸ்-7 தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் தமிழ் ரத்னா விருது வழங்கும் விழா, சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கினார்.

விழாவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான ஆர்.நல்லக்கண்ணுவுக்கு தமிழ் ரத்னா விருதை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.

மேலும் நடிகரும், எழுத்தாளருமான காத்தாடி ராமமூர்த்திக்கு நாடக ரத்னா விருது, வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகத்துக்கு இசை ரத்னா விருது, கதக் மற்றும் பரதநாட்டிய கலைஞர் மணிமேகலை சர்மாவுக்கு மகளிர் ரத்னா விருது, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமுக்கு கலை ரத்னா விருது, தொழில் அதிபர் பொன்னுசாமிக்கு தொழில் ரத்னா விருது, கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனை அனிதா பால்துரைக்கு விளையாட்டு ரத்னா விருது, பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் ந.கி.சொக்கலிங்கத்துக்கு ஆசிரியர் ரத்னா விருது, நூலக ஆசிரியர் பாலம் கல்யாணசுந்தரமுக்கு சேவை ரத்னா விருது, ஏழை மாணவர்கள் கல்வி கற்க திட்டம் தீட்டிய பசுல் ரஹ்மானுக்கு யுவ ரத்னா விருது, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான திருநங்கை பிரித்திகா யாஷினிக்கு சக்தி ரத்னா விருது, எழுத்தாளர் வே.தி.செல்வத்துக்கு சிறப்பு விருது, கோவை மாவட்டம் ஓடந்துறை ஊராட்சியை தன்னிறைவு மற்றும் பசுமை நிறைந்த வீடுகளாக மாற்றிய முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் பா.சண்முகம் மற்றும் ஊர் பிரதிநிதிகளுக்கும் சிறப்பு விருதுகளை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.

தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சினிமா டைரக்டர் கே.பாக்யராஜ், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி ஆகியோர் விருது பெற்றவர்களுக்கு, பொன்னாடை அணிவித்தும், சான்றிதழ்கள் வழங்கியும் கவுரவித்தனர்.

முன்னதாக நியூஸ்-7 தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் வி.சுப்பிரமணியன் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மு.ராஜாராம் தலைமையிலான விருதாளர்களை தேர்வு செய்த தேர்வு குழுவினருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். நிர்வாக ஆசிரியர் தில்லை வரவேற்புரை ஆற்றினார். கவிஞர் சினேகன் விழாவை தொகுத்து வழங்கினார்.

விழாவில் ‘தினத்தந்தி’ நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், இந்திரா புராஜெக்ட்ஸ் நிர்வாக இயக்குனர் பூபேஷ் நாகராஜன், எஸ்.டி. கொரியர் நிர்வாக இயக்குனர் அன்சாரி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இலக்கிய ரத்னா விருது பேராசிரியர் ஜி.ராஜநாராயணனுக்கு புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமியால் ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ளது.

விருது வழங்கும் விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசும்போது, தமிழ் மொழி இனிமையான மொழி. எனவே நான் தமிழை விரும்புகிறேன் என்று தமிழில் பேசினார். மேலும் ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்ற பழமொழி உள்பட ஏராளமான தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தினார். மேலும், அவர் பேசியதாவது.

தமிழ் மொழியின் கலாசாரத்தை அறிவதற்காக நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்று தமிழ் பழமொழி உள்ளது. ஐரோப்பியர்கள் தமிழக துறைமுகமான காவிரிப்பூம் பட்டினத்துக்கு வந்ததற்கு வரலாற்று சான்றிதழ் உள்ளது. சிலப்பதிகாரத்தில் பூம்புகாரின் சிறப்பு குறித்தும், கோவலன்-கண்ணகி எப்படி வாழ்ந்தார்கள், குடும்ப பின்னணி, தொழில் உள்ளிட்ட பல விஷயங்கள் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன.

சோழ பேரரசர்கள் தங்கள் எல்லையை இலங்கை, இந்தோனேஷியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விரிவாக்கம் செய்துள்ளதாக வரலாற்று குறிப்புகள் உள்ளன. எனவே, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் தமிழர்கள் பெருகி இருப்பது வியப்பானதாக தெரியவில்லை. சிறிய இந்தியா என்று அழைக்கப்படும் சிங்கப்பூரில் உள்ள மாரியம்மன் கோவில் முந்தைய கால தமிழர்கள் பெருமையை சொல்லும் சான்று.

அமெரிக்காவுக்கு, வேலைவாய்ப்பு மற்றும் உயர் கல்விக்காக இந்தியாவிலேயே தமிழர்கள் முதன் முதலாக இடம் பெயர்ந்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நிறைய தமிழர்கள் பெப்சி, கூகுள் போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் தமிழர்கள் அதிக அளவில் பணிபுரிந்து வருகின்றனர். 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழ் மொழி பரவலாக பேசப்படுகிறது.

தமிழ்நாடு பெருமைக்குரிய பல விஷயங்களை செய்து உள்ளது. தமிழகத்தில் தான் அரசு உதவி பெரும் பள்ளிகள் முதன் முதலாக தொடங்கப்பட்டு, கிராமப்புறங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டன. எம்.ஜி.ஆர். கொண்டு வந்த சத்துணவு திட்டம் மற்றும் இலவச சீருடை, காலணி, புத்தகம், பஸ்-பாஸ் போன்ற காரணங்களால் பள்ளியில் இடை நிற்கும் சதவீதம் பெருமளவில் குறைந்து, தமிழகத்தின் பள்ளி கல்வி தரம் உயர்ந்தது. பொருளாதார அடிப்படையில் தமிழகம் 2-வது மாநிலமாக சிறந்து விளங்குகிறது. உற்பத்தி துறையில் அதிக அளவு கவனம் செலுத்தப்படுவதால், வளர்ச்சியும் பெருகி வருகிறது.

அமைச்சர், எம்.பி., தொழில் முனைவோர், பத்திரிகையாளர், கவர்னர் மற்றும் ஒரு தேசியவாதி என்ற முறையில் எனது பல்வேறு அனுபவங்களின்படி நல்ல கொள்கைகளே வெற்றிக்கு மூலதனமாக இருந்து உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Next Story