எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் கருத்து வேறுபாடா? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்


எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் கருத்து வேறுபாடா? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
x
தினத்தந்தி 21 May 2018 11:00 PM GMT (Updated: 21 May 2018 8:43 PM GMT)

எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் கருத்து வேறுபாடா? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

சென்னை, 

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:–

கேள்வி:– ‘கட்சி தொடங்காவிட்டாலும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அமைப்புகளை பலப்படுத்தி வருவதாகவும், பெண்கள் தான் கட்சிக்கு முழு ஆதாரம்’ என்றும் ரஜினிகாந்த் கூறியிருக்கிறாரே?

பதில்:– ரஜினிகாந்துக்கு காலம் கடந்த ஞானோதயம் ஏற்பட்டு இருக்கிறது என்று தான் சொல்லமுடியும். ஆட்சியிலும், கட்சியிலும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த ஒரே கட்சி அ.தி.மு.க. தான்.

கேள்வி:– எடப்பாடி பழனிசாமி–ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன என்றும், அ.தி.மு.க.வில் மூத்த நிர்வாகிகளுக்கு மரியாதை தருவதில்லை என்றும், புதிய உறுப்பினர் சேர்க்கை நடைமுறைகள் சரிவர இல்லை என்றும் குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?

பதில்:– எந்தவித கருத்து வேறுபாடுகளும் இல்லை. இதுபோல தவறான கருத்துகள் வேண்டுமென்றே பரப்பப்படுகிறது. வெளியில் இருந்து கொண்டே சிலர் நாரதர் போல சிண்டு முடிகிற வேலைகளை செய்து கொண்டிருக்கின்றனர். என்ன செய்தாலும் அ.தி.மு.க.வின் ஒற்றுமையை சீர்குலைக்க முடியாது. உறுப்பினர் சேர்க்கை என்பது ஒரு தொடர் நடவடிக்கை ஆகும். எப்படி அ.தி.மு.க.வை ஒரு வலிமைமிக்க இயக்கமாக ஜெயலலிதா உருவாக்கினாரோ, அதேபோல 1.5 கோடிக்கும் அதிகமான தொண்டர்களை கொண்ட ஒரு வலிமையான இயக்கமாக அ.தி.மு.க. இயங்கும்.

கேள்வி:– நடிகர் எஸ்.வி.சேகர் எங்கே இருக்கிறார்? என்ற தகவல் கிடைத்திருக்கிறதா?

பதில்:– இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுகளை ஏற்று, அதன்படி உரிய நடவடிக்கைகள் நிச்சயம் எடுக்கப்படும்.

மேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார்.


Next Story