10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு


10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
x
தினத்தந்தி 22 May 2018 5:15 AM IST (Updated: 22 May 2018 3:38 AM IST)
t-max-icont-min-icon

10 லட்சத்து 1,140 மாணவர்கள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) வெளியாகிறது.

சென்னை, 

10 லட்சத்து 1,140 மாணவர்கள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) வெளியாகிறது. இணையதளத்தில் காலை 9.30 மணிக்கு முடிவுகளை பார்க்கலாம்.

10-ம் வகுப்பு எனப்படும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதி முதல் ஏப்ரல் 20-ந் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 12 ஆயிரத்து 337 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 64 ஆயிரத்து 491 மாணவர்களும், 36 ஆயிரத்து 649 தனி தேர்வர்களும் என மொத்தம் 10 லட்சத்து 1,140 பேர் எழுதினர்.

இதில் மாணவிகள் 4 லட்சத்து 81 ஆயிரத்து 371 பேரும், மாணவர்கள் 4 லட்சத்து 83 ஆயிரத்து 120 பேரும் அடங்குவர். மாணவிகளை விட 1,749 மாணவர்கள் கூடுதலாக தேர்வு எழுதினர். தனித்தேர்வர்களில் 5 திருநங்கைகளும், 186 சிறை கைதிகளும் தேர்வு எழுதினர்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே 23-ந் தேதி (அதாவது, நாளை) வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்தார். அதன்படி விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து முடிந்தது.

மதிப்பெண்கள் பட்டியல் மீண்டும் சரிப்பார்க்கப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளும் நடந்து முடிந்தன. இதையடுத்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை (புதன் கிழமை) வெளியாகிறது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் புதன்கிழமை (நாளை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும். www.dge.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் தேர்வு முடிவை பார்க்கலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story