தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் கல்வீச்சு; போலீசார் தடியடி
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் கற்கள் வீசப்பட்டன. கலகக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நேற்று 99-வது நாளை எட்டியது. இந்த நிலையில் இன்று 100-வது நாள் போராட்டம் நடக்கிறது.
இதையொட்டி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் இன்று அறிவிக்கப்பட்டது.
இந்த போராட்டத்துக்கு ஆதரவாக வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் 2 ஆயிரத்திற்கும் கூடுதலான மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதற்கு ஆதரவாக தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 10 ஆயிரம் கடைகளை அடைத்து போராட்டம் நடைபெறுகிறது.
தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் நேற்றிரவு முதல் நாளை காலை 8 மணிவரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசாரும் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் இன்று 100-வது நாள் பேரணியாக சென்றனர். தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே காவல் துறை மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் போலீசாரின் வாகனம் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து போலீசார் கலகக்காரர்கள் மீது தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே முற்றுகையிட முயற்சித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதும் தடியடி நடத்தப்பட்டது.
Related Tags :
Next Story