தூத்துக்குடி கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் - டிஜிபி ராஜேந்திரன்


தூத்துக்குடி கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் - டிஜிபி ராஜேந்திரன்
x
தினத்தந்தி 22 May 2018 8:45 AM GMT (Updated: 2018-05-22T14:15:17+05:30)

தூத்துக்குடி கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என காவல்துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். #SterliteProtest

சென்னை

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100-வது நாள் போராட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி சென்றவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதனால் தடியடி நடத்திய போலீசார் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் பலியானதாக கூறப்படுகிறது.

போராட்டம் கட்டுக்கடங்காமல் செல்வதால் வெளி மாவட்டங்களில் இருந்து போலீசார் தூத்துக்குடிக்கு வரவழைக்கபட்டு உள்ளனர்.  இந்நிலையில் ஸ்டெர்லைட் குடியிருப்பில் இருந்த வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

மேலும் ஸ்டெர்லைட் குடியிருப்புக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் குடியிருப்புகள் பற்றி எரிவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தீ வைப்பு சம்பவத்தால் தூத்துக்குடி- நெல்லை 4 வழி சாலையில் கரும்புகை மூட்டம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் தூத்துக்குடி வன்முறை தொடர்பாக பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன் கூறியுள்ளார். கலவரம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக காவல்துறை டிஜிபி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டாம் என அவர் கேட்டு கொண்டுள்ளார். 

Next Story