ஸ்டெர்லைட் போராட்டத்தில் 3 பேர் பலி? 50 வாகனங்கள் தீ வைத்து எரிப்பு


ஸ்டெர்லைட் போராட்டத்தில் 3 பேர் பலி? 50  வாகனங்கள் தீ வைத்து எரிப்பு
x
தினத்தந்தி 22 May 2018 9:11 AM GMT (Updated: 22 May 2018 9:11 AM GMT)

ஸ்டெர்லைட் போராட்டத்தில் 3 பேர் பலி 10 பேர் படுகாயம் அடைந்தனர். 50 க்கும் மேற்ட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன #SterliteIssue

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் முன்னெடுத்த போராட்டம் இன்று 100-ஆவது நாளை எட்டியது. போராட்டத்தின் மீது மத்திய , மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க இன்று முழு அடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது.

அப்போது தூத்துக்குடி ஆட்சியரகத்தை முற்றுகையிட பேரணியாக மக்கள் செல்ல முயற்சித்தனர். அவர்களை போலீஸார் மடத்துக்குளம் அருகே தடுத்துநிறுத்தினர்.

அப்படியும் போலீஸாரை மீறி பல்லாயிரக்கணக்கானோர் பேரணி சென்றனர். இதனால் போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீஸார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து போலீஸார் ஓட்டம் பிடித்தனர். பின்னர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது போலீஸார், பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டும் வீசினர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் கைகலப்பு ஏற்பட்ட நிலையில் அங்கு பதற்றம் நிலவுகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தி வருகின்றனர்.

போராட்டக்காரர்கள் காவல் வாகனத்தை கவிழ்த்தும், கல்லெறிந்தும் நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தி கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கானோர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தினுள் நுழைந்தனர்.

போரட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலக வாயில் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதால் பதற்றம் ஏற்பட்டது.  குறைவான போலீசாரே இருப்பதால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால்    போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

இதனால் மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து 2,000 போலீசார் தூத்துக்குடிக்கு விரைந்துள்ளனர்.

ஆர்பாட்டகாரர்கள் ஆட்சியர் வளாகத்தினுள் போலீஸ் வாகனத்தை எரித்துள்ளனர். தீவைப்பினால் ஆட்சியர் அலுவலகமே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் அருகே ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்புக்கு தீ வைப்பு எரிக்கப்பட்டது  5 மாடிகள் கொண்ட 5 கட்டடங்கள் எரிந்து சேதம் அடைந்தன.

இந்த நிலையில், காவல்துறையின் தடியடியில் சிக்கி ஒருவர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடப்பதையும்,ஒருவர் காயத்தோடு எழுந்து நடக்க முடியாமல் அலறுவதும் ஊடகங்களில் வெளியாகின. இந்த நிலையில் கலவரத்தில் 3 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. உயிரிழந்தவர்கள், காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த மூன்று பேரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்த ஒருவர் உசிலம்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன் என்பதும், மற்றொருவர் லூர்தமாள்புரம் கிளாஸ்டின் என்பதும் தெரிய வந்துள்ளது.

ரயில்வே காலனிபகுதியைச் சேர்ந்த வெனிஸ்டா என்ற பெண்ணும் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி பலியாகியுள்ளனர். இவர் பத்தாம் வகுப்பு தேர்வெழுதிவிட்டு, தேர்வு முடிவுக்காக காத்திருந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு, துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். 10 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர்

பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை சூறையாடினர். ஆட்சியர் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட வாகனங்களை பொதுமக்கள் சூறையாடினர். 

Next Story