தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - தமிழக அரசு
தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது. #SterliteProtest
சென்னை,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கிராம மக்கள் போராட்டம் இன்று 100-வது நாளை எட்டியது. இதையொட்டி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்துக்கு ஆதரவாக வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் அறிவித்தனர். பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று ஒருநாள் வேலை நிறுத்தை தொடங்கினர். இதனால் போராட்டம் தீவிரம் அடைந்தது.
எனவே சட்டம்- ஒழுங்கினை பராமரித்திட நேற்று (திங்கட்கிழமை) இரவு 10 மணி முதல் நாளை (புதன்கிழமை) காலை 8 மணிவரை குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144-ன் கீழ் தூத்துக்குடி தெற்கு போலீஸ் நிலையம் மற்றும் சிப்காட் போலீஸ் நிலைய எல்கைகளுக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் காலை 9 மணி முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பனிமய மாதா கோயிலில் இருந்து பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். 144 தடை உத்தரவை மீறி பொதுமக்கள் பேரணியாக சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திரண்ட பொதுமக்களை போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கலைக்க முற்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. பொதுமக்கள் அதிகமாக கூடிய நிலையில் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை எட்டியது. இருதரப்பு இடையே மோதல் வெடித்து, வன்முறைக்களமானது. போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10-ம் வகுப்பு மாணவி உள்பட 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. போலீஸ் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.3 லட்சமும் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், நிவாரணம் வழங்கப்படும். சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story