தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: சென்னையில் பாதுகாப்பு அதிகரிப்பு


தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: சென்னையில் பாதுகாப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 23 May 2018 10:29 AM IST (Updated: 23 May 2018 10:29 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சென்னை முழுக்க போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தியது தமிழக அரசு. #SterliteProtest #sterlitekillsthoothukudi

சென்னை

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை இயங்கி வருகிறது.  இந்த ஆலையின் கழிவுகளால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன என்றும் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் பொதுமக்கள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதனால் ஸ்டெர்லைட் ஆலையை மேலும் விரிவாக்கம் செய்வதை கைவிட்டு, நிரந்தரமாக மூடவேண்டும் என்று வலியுறுத்தி அந்த பகுதியில் உள்ள அ.குமரெட்டியபுரம் மக்கள் போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த போராட்டத்துக்கு 18 கிராம மக்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.

நேற்று 100வது நாளாக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.  இதனால் போலீசார் வன்முறையை கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு நடத்தினர்.  இந்த சம்பவத்தில் 10 பேர் பலியானர்கள்.  65 பேர் காயமடைந்தனர்.

இந்த துப்பாக்கி சூடுக்கு எதிராக தமிழகம் முழுக்க போராட்டம் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முக்கியமாக சென்னையில் மெரினா, அண்ணாசாலை போன்ற பகுதிகளில் போராட்டம் நடக்க வாய்ப்புள்ளதாக செய்தி வெளியானது.

இதனால் தற்போது தமிழகம் முழுக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மெரினா மற்றும் டிஜிபி அலுவலக பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

3 இணை ஆணையர்கள் தலைமையில் சென்னை முழுக்க போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. காலையில் இருந்து சென்னை கடலோர பகுதிகளில் மட்டும் 2000 போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னையில் பதட்டமான நிலை நிலவுகிறது.

Next Story