தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் - போலீசார் தடியடி
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் குவிந்த உறவினர்கள் மீது போலீசார் தடியடி கண்ணீர் புகைகுண்டு வீசி கலைத்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியது.
இந்த சம்பவம் நாடெங்கும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் 2-வது பிரிவின் விரிவாக்கத்திற்கு எதிராக பாத்திமா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். ஆலை விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்களின் கருத்தையும் நிர்வாகம் கேட்கவில்லை என்றும் மனுவில் கூறியிருந்தார்.
இவ்வழக்கின் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிகளை நிறுத்தும்படி நீதிபதிகள் சுந்தர், அனிதா சுமந்த் இன்று உத்தரவிட்டனர். மேலும், ஆலையை நடத்துவதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரும் வேதாந்தா நிறுவனத்தின் மனுவை மத்திய அரசு பிரிசீலித்து 4 மாதங்களில் முடிவு செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 18க்கும் மேற்பட்ட கிராம மக்கள், நேற்று 100-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையின் தடுப்பை மீறி, போராட்டத்தின் போது ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். அப்போது காவல் துறையினருக்கு, மக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. பின்னர் தடையை மீறி மக்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.
இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கார்த்திக் என்பவர் உயிரிழந்தார். காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பொதுமக்களை கண்ணீர் புகை குண்டு வீசியும் லேசான தடியடி நடத்தியும் கலைத்தனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தி வருபவர்களிடம் மதுரை டிஐஜி பிரதீப்குமார் பேச்சுவார்த்தை நட்த்தினார்.
மருத்துவமனை பின் புறம் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசினார்.
Related Tags :
Next Story