ஸ்டெர்லைட் நிறுவனத்தில் எனது மருமகன் காண்டிராக்ட் எடுத்தாரா? அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டுக்கு வைகோ பதில்
‘ஸ்டெர்லைட்’ நிறுவனத்தில் வைகோவின் மருமகன் ‘காண்டிராக்ட்’ எடுத்து இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.
சென்னை,
‘ஸ்டெர்லைட்’ நிறுவனத்தில் வைகோவின் மருமகன் ‘காண்டிராக்ட்’ எடுத்து இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார். அதற்கு வைகோ பதில் அளித்தார்.
அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று முன்தினம் பேட்டி அளித்தார். அப்போது அவர், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மருமகன், ஸ்டெர்லைட் நிறுவனத்தில் காண்டிராக்ட் எடுத்து இருப்பதாக குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளிக்கும் விதத்தில் வைகோ, ‘தினத்தந்தி’ நிருபருக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
1986-ல் இருந்து ‘எல் அண்டு டி’ நிறுவனத்தின் தூத்துக்குடி மாவட்ட ‘ஸ்டாக்கிஸ்டாக’ எனது சகோதரி மகன் ஜெகதீசன் இருந்து வந்தார். 1996-ல் ‘ஸ்டெர்லைட்’ நிறுவனம் இயங்க தொடங்கியபோது, ‘எல் அண்டு டி’ நிறுவனத்துக்காக ‘வெல்டிங் ராடு’ வேலைகள் செய்து கொடுத்துள்ளார்.
இந்த விவரம் எதுவும் அக்காலத்தில் முதலில் எனக்கு தெரியாது. 2000-ம் ஆண்டு நவம்பர் மாதம் ‘ஸ்டெர்லைட்’ நிறுவன அதிபர் அனில் அகர்வால் எனது மருமகனை சந்திக்க ஆள் மேல் ஆள் அனுப்பியும் என் மருமகன் சந்திக்க மறுத்துவிட்டார். மேலும், அதே 2000-ம் ஆண்டில், இந்திய அரசின் அட்டார்னி ஜெனரல் ஜி.ராமசாமி டெல்லியில் இருந்து சென்னை தாயகம் வந்து, ‘ஸ்டெர்லைட்’ அதிபர் அனில் அகர்வால் என்னை சந்திக்க விரும்புவதாகவும், எங்கு அழைத்தாலும் அவர் வருவார் என்றும் தெரிவித்தார்.
ஆனால், நான் அவரை ஒரு நிமிடம் கூட சந்திக்க மாட்டேன் என மறுத்து அனுப்பினேன். இதை 100-க்கும் மேற்பட்ட கூட்டங்களில் நான் தெரிவித்து இருக்கிறேன். 2002-க்கு பிறகு எனது மருமகன் ‘எல் அண்டு டி’ ‘ஸ்டாக்கிஸ்டு’ உரிமையையே வேண்டாம் என்று விலக்கிக் கொண்டார்.
இந்த நிலையில், 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு ‘ஸ்டெர்லைட்’ பிரச்சினை காரணம் என்று ஒரு வாரப்பத்திரிகை கட்டுரை வெளியிட்டு இருந்தது. உண்மையில், நான் தமிழக மக்கள் நலனுக்காக அணு அளவும் சுயநலம் இன்றி என்னை அர்ப்பணித்து ஊழியம் செய்து வருகிறேன். என் மனசாட்சிக்கு நேர்மையாக நடக்கிறேன். என் உயிர் மூச்சு அடங்கும் வரை அப்படியே வாழ்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு இடையே வைகோ வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடியில் காவல்துறை நடத்திய கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்று செய்தி வந்தது. ஆனால், மேலும் சிலரது உடல்கள் பிண அறையில் இருக்கலாம் என்ற ஐயம் எழுந்துள்ளது. போலீசார் இன்று (நேற்று) மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காளியப்பன் என்ற 22 வயது இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரத்தில் பொதுமக்கள் மிகுந்த வேதனைக்கும், ஆத்திரத்திற்கும் ஆளாகி இருக்கும் நிலையில், மத்திய அரசின் உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபா, ‘தூத்துக்குடியில் நிலைமையைச் சமாளிக்கத் தேவையான உதவிகளைச் செய்யத் தயார்; தமிழகத்திற்கு மத்திய துணை ராணுவத்தை அனுப்பத் தயார்’ என்று தமிழக அரசுக்கு செய்தி அனுப்பிய உடன், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், துணை ராணுவத்தை அனுப்பி வைக்கக் கோரியுள்ள செய்தி, மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
வேதாந்தா குழுமத்தின் ‘ஸ்டெர்லைட்’ நிறுவனம், மத்திய அரசைத் தன் வயப்படுத்தி வைத்து இருப்பதால், ‘ஸ்டெர்லைட்’ ஆலைக்காகத் தமிழக மக்களைக் காக்கை, குருவிகளைப் போலச் சுட்டுக்கொல்ல, துணை ராணுவத்தை அனுப்ப முனைந்துவிட்டது. இதுவரை போலீசார் நடத்திய கொடூரமான தாக்குதலைவிட பன்மடங்கு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்த துணை ராணுவம் தயங்காது.
துணை ராணுவத்தை மத்திய அரசு அனுப்புமானால், அது தமிழ்நாட்டின் மீது ஒரு அன்னிய அரசின் படையெடுப்பாகவே கருதும் நிலை உருவாகும். எனவே, எக்காரணத்தை முன்னிட்டும் துணை ராணுவத்தைத் தமிழ்நாட்டுக்கு அனுப்பக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story