வரலாறு காணாத உச்சம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80-ஐ தாண்டியது டீசல் ரூ.72.14-க்கு விற்பனை


வரலாறு காணாத உச்சம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80-ஐ தாண்டியது டீசல் ரூ.72.14-க்கு விற்பனை
x
தினத்தந்தி 23 May 2018 11:45 PM GMT (Updated: 23 May 2018 9:19 PM GMT)

வரலாறு காணாத உச்சமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 ரூபாயை தாண்டியது. டீசல் ரூ.72.14-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னை, 

பெட்ரோல்-டீசல் விலையை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி முதல் கடந்த 13-ந் தேதி வரையில் 19 நாட்கள் பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இதற்கு கர்நாடக சட்டசபை தேர்தல்தான் காரணம் என்ற கருத்து வெளிப்படையாக பரவியது.

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்ததை தொடர்ந்து, பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் ஏறுமுகத்தில் பயணிக்க தொடங்கியது.

கடந்த 14-ந் தேதி பெட்ரோல் ரூ.77.61-க்கும், டீசல் ரூ.69.79-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் பெட்ரோல் ரூ.79.79-க்கும், டீசல் ரூ.71.87-க்கும் விற்பனை ஆனது.

இதன்மூலம் 4 ஆண்டுகளுக்கு பிறகு பெட்ரோல் விலை புதிய உச்சத்தை எட்டியது. கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.55-க்கு விற்பனை செய்யப்பட்டு இருந்தது நினைவுகூரத்தக்கது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதாலும், பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயரும் என்று கருதப்படுகிறது.

அந்த வகையில், வரலாறு காணாத உச்சமாக, பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு 32 காசுகள் உயர்ந்து 80 ரூபாயை தாண்டியது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.11-க்கும், டீசல் ரூ.72.14-க்கும் விற்பனையானது. (நேற்று டீசல் லிட்டருக்கு 27 காசுகள் உயர்ந்தது.)

கடந்த 14-ந் தேதி முதல் நேற்று வரை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50-ம், டீசல் லிட்டருக்கு ரூ.2.35-ம் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர் விலை ஏற்றத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story