நேரு பூங்கா-சென்டிரல் இடையே மெட்ரோ ரெயில் சேவை எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்


நேரு பூங்கா-சென்டிரல் இடையே மெட்ரோ ரெயில் சேவை எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 23 May 2018 11:00 PM GMT (Updated: 23 May 2018 9:33 PM GMT)

நேரு பூங்கா-சென்டிரல் இடையே மெட்ரோ ரெயில் சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரி ஹர்தீப்சிங் புரி ஆகியோர் நாளை (வெள்ளிகிழமை) கொடியசைத்து தொடங்கி வைக்கின்றனர்.

சென்னை, 

நேரு பூங்கா-சென்டிரல் இடையே மெட்ரோ ரெயில் சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரி ஹர்தீப்சிங் புரி ஆகியோர் நாளை (வெள்ளிகிழமை) கொடியசைத்து தொடங்கி வைக்கின்றனர். விழாவில் 6 ரெயில் நிலையங்களும் திறக்கப்படுகிறது.

சென்னையில் உள்ள ஷெனாய்நகர் 2-வது வழிப்பாதை மற்றும் நேரு பூங்கா-சென்டிரல் இடையிலான பணிகள் மற்றும் சின்னமலை-ஏ.ஜி-டி.எம்.எஸ். இடையிலான சுரங்க மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடந்து வந்தது. இந்த பாதையில் கடந்த 14-ந் தேதியில் இருந்து 20-ந் தேதி வரை பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் ஆய்வு செய்தார்.

அதனடிப்படையில் இந்த பாதையில் பயணிகள் ரெயிலை இயக்குவதற்கு எந்த தடையும் இல்லை. பாதுகாப்பான முறையில் ரெயில் பாதைகள் மற்றும் ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே பயணிகள் ரெயிலை இயக்கலாம் என்று கூறி பாதுகாப்பு ஆணையர் அனுமதி சான்றிதழ் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து நேரு பூங்கா-சென்டிரல் மற்றும் சின்னமலை-ஏ.ஜி-டி.எம்.எஸ். இடையேயான மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடக்க விழா நாளை (வெள்ளிக்கிழமை) பகல் 12.30 மணிக்கு எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நடக்கிறது. விழாவில் பச்சை வழித்தடத்தில் நேரு பூங்கா- சென்டிரல் மற்றும் நீல வழித்தடத்தில் சின்னமலை- ஏ.ஜி-டி.எம்.எஸ். மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதையில் பயணிகள் சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை மந்திரி (தனிப்பொறுப்பு) ஹர்தீப்சிங் புரி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைக்கின்றனர்.

தொடர்ந்து பச்சை, நீல வழித்தடத்தில் உள்ள எழும்பூர், சென்டிரல், ஏ.ஜி-டி.எம்.எஸ்., தேனாம்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை ஆகிய 6 குளிரூட்டப்பட்ட சுரங்க ரெயில் நிலையங்களுக்கான கல்வெட்டுகளையும் அவர்கள் திறந்து வைக்கின்றனர்.

விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், டி.ஜெயகுமார், எம்.சி.சம்பத் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மத்திய அரசு செயலாளர் துர்கா சங்கர் மிஷ்ரா, மெட்ரோ ரெயில் நிறுவன நிர்வாக அலுவலர் பங்கஜ் குமார் பன்சால், தமிழக அரசு முதன்மைச் செயலாளர் (திட்டம், வளர்ச்சி) டி.வி.சோமநாதன் உள்ளிட்ட அதிகரிகள் பலர் கலந்துகொள்கின்றனர்.

Next Story