முதலமைச்சர் பழனிசாமி பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் -மு.க.ஸ்டாலின் ஆவேசம்
முதலமைச்சர் பழனிசாமி பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றபட்ட மு.க.ஸ்டாலின் கூறினார். #ThoothukudiShooting #MKStalin
சென்னை
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்கூட்டத்தை புறக்கணித்தன.
இதன் பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரையும், எஸ்பி-யையும் பணியிட மாற்றம் செய்துள்ளது அரசின் கண்துடைப்பு நடவடிக்கை என்றார்.
துப்பாக்கிச் சூட்டை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம். 3 நாட்களாக தூத்துக்குடி மாவட்டம் கொந்தளிப்பாக உள்ளது. பலர் உயிரிழந்துள்ளனர். சாதாரண உடையில், பயிற்சி பெற்றவர்கள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
பதவியைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி யோசனை செய்து கொண்டிருக்கிறார். செயலற்ற தலைமையில் உள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்றார். தூத்துக்குடி பொதுமக்கள் 13 பேர் உயிரிழப்புக்கு முதலமைச்சர் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
தலைமைச் செயலகத்துக்குச் சென்ற ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர், முதல்வர் பழனிசாமியை சந்திக்க அனுமதி கோரினர்.
உடனடியாக முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால், அவர்கள் முதல்வர் அறை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.சென்னை தலைமை செயலக 4-வது வாயில் முன்பு அமர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். முதலமைச்சர் அறை முன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு போலீசே காரணம் எனக்கூறி திமுகவினர் முழக்கமிட்டனர். தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் அறை முன் தர்ணாவில் ஈடுபட்ட ஸ்டாலின் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டார்.
இந்த தகவல் அறிந்த திமுக தொண்டர்கள், தலைமைச் செயலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தலைமை செயலகம் அருகே 500 க்கும் மேற்பட்ட திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் தலைமைச் செயலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுகவினரின் போராட்டத்தால் ராஜாஜி சாலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது.
சென்னை தலைமை செயலகம் அருகே எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க எம் எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர். திமுகவினருடன் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களும் கைது செய்யப்பட்டனர்.
கைதான ஸ்டாலினை போலீசார் வாகனத்தில் கொண்டு செல்லவிடாமல் திமுகவினர் தடுத்து வருகின்றனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் அமைச்சர் ஜெயக்குமார் இல்லை அவர் பொய் குமார் என்று தெரிவித்தார். என்னை துப்பாக்கியால் சுட்டால் கூட குண்டுகளை நெஞ்சில் தாங்க தயார். முதலமைச்சர் பழனிசாமி பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என கூறினார்.
அங்கு அதிக அளவில் திமுக.வினர் திரண்டு போராட்டம் நடத்தி வருவதால் ஸ்டாலினை கைது செய்து அழைத்துச்செல்ல முடியாமல் போலீஸ் திணறினர்.
திமுகவினர் குவிந்துள்ள தலைமைச் செயலக பகுதியில் காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story