பரபரப்பு செய்திக்காக ஸ்டாலின் நாடகமாடுகிறார் - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு
பரபரப்பு செய்திக்காக ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார் என முதல் அமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். #SterliteProtest #EdappadiPalaniswami #MKStalin
சென்னை,
சென்னை தலைமை செயலகத்தில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் இன்று நடந்தது. இந்த ஆய்வு குழு கூட்டம் முடிந்தபின் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சபாநாயகர் அறையில் 11மணிக்கு அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு திடீரென மு.க.ஸ்டாலின் வெளியேறிவிட்டார். தொலைக்காட்சியில் பார்த்தால் முதலமைச்சர் தன்னை சந்திக்க வந்த ஸ்டாலினை பார்க்க மறுத்ததாக செய்திவந்தது. வேண்டுமென்றே திட்டமிட்டு கூட்டம் நடைபெற்ற சமயத்தில் தவறான செய்தியை ஸ்டாலின் பரப்பியிருக்கிறார்.
அல்லது அலுவல் ஆய்வு குழு கூட்டம் முடிந்ததும் என்னை சந்தித்து பேசியிருக்கலாம். என்னை சந்தித்து மனு அளிக்க வேண்டும் என ஸ்டாலின் கூறவில்லை.முதலமைச்சரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை என ஸ்டாலின் தவறான செய்தியை பரப்புகிறார்.
பரபரப்பான செய்திகளுக்காக இது போன்ற நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் மு.க. ஸ்டாலின். அரசியல் நாடகம் நடத்தவே என் அறை முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு உள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு தொடர் முயற்சி எடுத்து வருகிறது. ஸ்டெர்லைட்டுக்கு மின்சார இணைப்பை மின்சார வாரியம் இன்று துண்டித்துள்ளது. எதிர்க்கட்சிகள்,சில இயக்கங்கள் அப்பாவி மக்களை தூண்டிவிட்டு போராட்டங்களை நடத்துகின்றனர் .ஸ்டெர்லைட் விவகாரத்தில் தூத்துக்குடி மக்களின் கோரிக்கை தொடர்பாக சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல.தற்காப்புக்காகவே நடத்தப்பட்டது விஷமிகளும், சில கட்சி தலைவர்களும் மக்களை திசை திருப்பினார்கள் .
144 தடை உத்தரவு அமலில் இருக்கிறது; கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை முதலில் மதிக்க வேண்டும்