தூத்துக்குடியில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் ஆலோசனை; பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு நீடிப்பு


தூத்துக்குடியில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் ஆலோசனை; பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு நீடிப்பு
x
தினத்தந்தி 24 May 2018 6:50 PM IST (Updated: 24 May 2018 6:50 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பேருந்துகளை தவிர்த்து பிற வாகனங்கள் இயங்க தொடங்கியது, பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு உஷார் நிலைப்படுத்தப்பட்டு உள்ளது. #Thoothukkudi #SterliteProtest


தூத்துக்குடி,


ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற பொதுமக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்து உள்ளனர். வன்முறை சம்பவங்களால் தூத்துக்குடி பகுதியில் பதற்றம் தொடர்ந்தது. அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க அங்கு கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

தூத்துக்குடியில் இன்று காலை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 

தூத்துக்குடியில் இருந்து எந்த பஸ்களும் வெளியூர்களுக்கு இயக்கப்படவில்லை. இதனால் தூத்துக்குடி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. தூத்துக்குடியில் நீடிக்கப்பட்ட 144 தடை உத்தரவு  நாளை வெள்ளிக்கிழமை) காலை 10 மணியுடன் முடிகிறது. எனவே, மீண்டும் போராட்டங்கள் வெடிக்காமல் இருக்க போலீசாரும், அரசு அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். தூத்துக்குடியில் அமைதியை நிலைநாட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் சிறப்பு அதிகாரிகள் ககன்தீப் சிங் பேடி, எஸ்பி முரளி ரம்பா ஆகியோர் ஆலோசனையை மேற்கொண்டார்கள்.

 பொதுமக்களுக்கு தேவையான பொருட்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாலையில் தூத்துக்குடி நகர பகுதியில் பேருந்துகளை தவிர்த்து மற்ற வாகனங்கள் இயங்க தொடங்கி உள்ளது. நகரில் ஆங்காங்கே மருத்துக்கடைகள், மளிகைக் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற கடைகள் திறக்கப்படவில்லை. அண்ணாநகர் உள்ளிட்ட பதற்றமான பகுதிகளில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து சென்னை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில்  ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.  


Next Story