தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: தமிழகம் முழுவதும் பா.ம.க. நாளை ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: தமிழகம் முழுவதும் பா.ம.க. நாளை ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 May 2018 6:45 PM GMT (Updated: 24 May 2018 6:27 PM GMT)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ம.க. சார்பில் நாளை (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

சென்னை,

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ம.க. சார்பில் நாளை (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தூத்துக்குடியில் அமைந்துள்ள உயிர்க்கொல்லி ஆலையான ஸ்டெர்லைட் தாமிர ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டம் நடத்திய அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 12 பேரை கொலை செய்த பினாமி அரசு, இப்போது வரை அதன் குற்றத்தை உணர்ந்து கொள்ளவில்லை. மாறாக, உரிமை கோரி போராட்டம் நடத்திய மக்களை வன்முறையாளர்களாக அரசு சித்தரிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சில கட்சிகளின் தூண்டுதலால் தான் தூத்துக்குடியில் மக்கள் போராட்டம் நடத்தியதாகவும், பொதுமக்கள் சட்டவிரோதமாக தாக்குதல் நடத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சேதப்படுத்தியதாகவும் அதனால் தான் வேறு வழியின்றி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறியிருக்கிறார். இது மிகவும் அபத்தமான குற்றச்சாற்று.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான அனைத்து அதிகாரிகளும் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். இந்நிகழ்வு குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக துப்பாக்கிச்சூட்டுக்கு பொறுப்பேற்று எடப்பாடி தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 26–ந்தேதி (நாளை) தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் பா.ம.க. சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும். சென்னையில் நான் தலைமையேற்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story