1, 6, 9-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்ட புத்தகங்கள் விற்பனை தொடங்கியது


1, 6, 9-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்ட புத்தகங்கள் விற்பனை தொடங்கியது
x
தினத்தந்தி 25 May 2018 3:45 AM IST (Updated: 25 May 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

புதிய பாடத்திட்டத்தில் உருவாக்கப்பட்ட 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் விற்பனை தொடங்கியது.

சென்னை, 

புதிய பாடத்திட்டத்தில் உருவாக்கப்பட்ட 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் விற்பனை தொடங்கியது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களை மாற்றியமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதில் இந்த கல்வியாண்டுக்கு முதல்கட்டமாக 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடநூல்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த பாடநூல்கள் சிறந்த வல்லுநர்களால் மாணவர்கள் எளிதாக புரிந்துகொள்ளத்தக்க வகையில் பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதால் பக்கங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. குயிக் ரெஸ்பான்ஸ் (கியூ.ஆர்.கோடு) போன்ற சிறப்பு அம்சங்களுடன் இவை உருவாக்கப்பட்டுள்ளன.

பாடநூல்கள் வழக்கமாக அச்சிட பயன்படுத்தப்படும் மேப் லித்தோ தாளுக்கு பதிலாக தரம் உயர்ந்த எலிகண்ட் தாள் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 11-ம் வகுப்பு பாடநூல்கள் 60 ஜி.எஸ்.எம். தாளில் ஒரு வண்ண அச்சுக்குப் பதிலாக, 80 ஜி.எஸ்.எம். தாளில் 4 வண்ணங்களில் அச்சிடப்பட்டுள்ளன. மேலட்டைகள் சிறந்த முறையில் அச்சிடப்பட்டு லேமினேஷன் செய்து புதுப்பொலிவுடன் தயாரிக்கப்பட்டுள்ளன.

புதிய பாடத்திட்டத்தின்படி தயார் செய்யப்பட்டுள்ள 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்குரிய விலையில்லா பாடநூல்கள், பள்ளி திறக்கும் அன்றே மாணவ-மாணவர்களுக்கு வழங்க ஏதுவாக அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

1, 6, 9-ம் வகுப்புகளுக்கான பாடநூல்கள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. 11-ம் வகுப்புக்கான பாடநூல்கள் ஜூன் 2-வது வாரத்தில் விற்பனை தொடங்கப்பட உள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் பாடநூல்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதால் அதற்கேற்றவாறு விற்பனை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1, 6, 9-ம் வகுப்பு பாடநூல்கள் ஆன்லைனில் ( www.text-b-o-o-k-o-n-l-i-ne.tn.nic.in) விற்பனை தொடங்கியுள்ளது என்றும் மேலும் டி.பி.ஐ. வளாகத்திலும் புதிய பாடப்புத்தகங்கள் கிடைக்கும் என்றும் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக அதிகாரி ஜெகன்நாதன் தெரிவித்துள்ளார்.

Next Story