திருச்சியில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை: மருத்துவமனை டீன் அறிவிப்பு


திருச்சியில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை: மருத்துவமனை டீன் அறிவிப்பு
x
தினத்தந்தி 25 May 2018 5:17 AM GMT (Updated: 25 May 2018 5:17 AM GMT)

திருச்சி மாவட்டத்தில் யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என திருச்சி மருத்துவமனை டீன் கூறியுள்ளார்.

திருச்சி,

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் தீவிர காய்ச்சலால் 10 பேர் பலியாகினர். இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு நிபா வைரஸ் தாக்கியிருந்தது தெரியவந்துள்ளது. இதனை சுகாதார துறை உறுதி செய்துள்ளது.  இதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளன. 

நிபா வைரஸ் கடந்த 1998ம் ஆண்டு முதன்முறையாக மலேசியாவில் கண்டறியப்பட்டது.  அங்குள்ள மரங்களில் வாழ்ந்து வந்த பழங்களை தின்னும் ஒரு வகை வவ்வால்களால் இந்த வைரஸ் ஏற்பட்டது தெரிய வந்தது.  இந்த வவ்வால் கடித்த பழங்களை உண்பது வைரஸ் பரவுவதற்கு காரணம் என கூறப்படுகிறது.

இதனால் தலைவலி, மூச்சு விடுவதில் சிரமம், மயக்கம் ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன.  கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் வைரஸ் பாதிப்புகள் காணப்படுகின்றன.  25 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் நிபா வைரஸ் தாக்கத்தால் 75 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதார துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறிருந்தார். மேலும் கேரள மாநில எல்லைகளில் தடுப்பு நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்  திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 20 பேர் கேரள மாநிலத்தில் தார்சாலை அமைக்கும் பணிக்காக சென்று விட்டு ஊர் திரும்பினர். இந்நிலையில் ஊர் திரும்பிய 20 பேரில் பெரியசாமி என்பவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனிடையே பெரியசாமிக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டும் என அவருடன் பணி புரிந்தவர்கள் மருங்காபுரி வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். மேலும் கார்த்திக் என்பவருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்தது.

இது தொடர்பாக திருச்சி அரசு மருத்துவமனை டீன் அனிதாவிடம் நிபா வைரஸ் பாதிப்பு குறித்து தொடர்பு கொண்டு கேட்கையில், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 பேருக்கும் சாதாரண காய்ச்சலே தவிர நிபா வைரஸ் அறிகுறி இல்லை. எனவே இது போன்ற தகவல்களை நம்ப வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

Next Story