சென்னை: புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்


சென்னை: புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 25 May 2018 1:40 PM IST (Updated: 25 May 2018 1:58 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். #MetroTrain #EdappadiPalanisamy

சென்னை,

சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். சென்னை சென்ட்ரல் முதல் நேரு பூங்கா வரையிலுமான சுரங்கப்பாதை வழித்தடத்தில் இந்த மெட்ரோ ரயில் சேவை செயல்பட உள்ளது.

மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைத்து முதல்வர் பேசுகையில், ‘போக்குவரத்தில் அதி நவீன வளர்ச்சிதான் மெட்ரோ ரயில் சேவை. மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதியை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கினார். நாட்டிலேயே அதிக நீளமுள்ள சுரங்கப்பாதை சென்னையில் தான் உள்ளது. 2016ல் கோயம்பேடு-ஆலந்தூர் இடையே மெட்ரோ ரெயில் பாதை தொடங்கப்பட்டது. மேலும் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து சிற்றுந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயிலில் இதுவரை 1.64 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். 2020 ஜூன் மாதத்திற்குள் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் நிறைவடையும். மேலும் இதற்காக கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 3 மெட்ரோ ரெயில் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகர வளர்ச்சிக்காக அரசு பாடுபட்டு வருகிறது. சென்னை மாநகரத்தை உலக தரத்தில் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் ஆலந்தூரில் இருந்து வண்டலூர் வரை மெட்ரோ ரெயிலின் வழித்தடத்தை நீட்டிக்க அரசு திட்டமிட்டு உள்ளது. பயணிகளுக்காக பல வசதிகள் செய்து தர உள்ளோம். மேலும் 2-வது வழித்தடத்திற்கு விரைந்து நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு  வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்’ என்று முதல்வர் தனது உரையில் கூறினார்.



Next Story