தமிழகத்தில் பதிவு செய்யப்படும் பஸ்களில் படுக்கை வசதிக்கு அனுமதி தமிழக அரசு உத்தரவு


தமிழகத்தில் பதிவு செய்யப்படும் பஸ்களில் படுக்கை வசதிக்கு அனுமதி தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 26 May 2018 4:00 AM IST (Updated: 26 May 2018 1:50 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்து, தமிழகத்தில் பதிவு செய்யப்படும் பஸ்களில் படுக்கை வசதி வைத்துக்கொள்ள அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்து, தமிழகத்தில் பதிவு செய்யப்படும் பஸ்களில் படுக்கை வசதி வைத்துக்கொள்ள அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மாநிலத்துக்கு உள்ளே, அண்டை மாநிலங்கள் என தொலைதூர இடங்களுக்கு பயணம் செய்ய ரெயில் போக்குவரத்துக்கு அடுத்து பெரும்பாலானோர் நம்பி இருப்பது பஸ் சேவைகளைத்தான்.

இருக்கை வசதி மட்டும் உள்ள பஸ்களில் பயணம் செய்யும்போது பல்வேறு சிரமங்களை பயணிகள் சந்திக்கவேண்டியது உள்ளது. படுக்கை வசதி உள்ள பஸ்களில் பயணிகள் சவுகரியமான பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

இதனால் தொலைதூரங்களுக்கு செல்பவர்கள் படுக்கை வசதி உடைய பஸ்களையே பெரும்பாலும் தேர்வுசெய்கின்றனர்.

படுக்கை வசதியுடன் தமிழகத்தில் இயக்கப்படும் ஆம்னி பஸ்கள் அனைத்தும் கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டவை ஆகும். வெளி மாநிலங்களில் பதிவு செய்து, தற்காலிகமாக அனுமதிச் சீட்டு பெற்று படுக்கை வசதி உடைய ஆம்னி பஸ்கள் தமிழகத்தில் இயக்கப்படுகின்றன.

தமிழகத்தில் படுக்கை வசதி உடைய பஸ்களுக்கு பாதுகாப்பு கருதி அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்தநிலையில், மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்து தமிழகத்தில் பதிவு செய்யும் பஸ்களுக்கு படுக்கை வசதிக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து மோட்டார் வாகன சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் பதிவு செய்யும் பஸ்களில் படுக்கை வசதி, படுக்கை மற்றும் இருக்கை வசதிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தொலைதூரங்களுக்கு செல்லும் அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்களில் படுக்கை வசதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. படுக்கை வசதி பஸ்களுக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு போக்குவரத்து பணியாளர் ஒன்றிப்பு முன்னாள் மாநில தலைவரும், சட்ட ஆலோசகருமான கு.பால்பாண்டியன் கூறுகையில், “படுக்கை வசதி பஸ்களுக்கு பயணிகளிடம் அமோக வரவேற்பு இருக்கிறது. இந்த புதிய முறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். அரசு போக்குவரத்துக்கழக பஸ்களில் தொலைதூரங்களுக்கு செல்பவர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும்” என்றார்.

Next Story