அழைப்பிதழ் அச்சிடாமலேயே நடந்த கி.வீரமணி இல்ல திருமணம்


அழைப்பிதழ் அச்சிடாமலேயே நடந்த கி.வீரமணி இல்ல திருமணம்
x
தினத்தந்தி 17 Jun 2018 8:30 PM GMT (Updated: 17 Jun 2018 8:02 PM GMT)

சென்னை பெரியார் திடலில் அழைப்பிதழ் அச்சிடாமலேயே கி.வீரமணி இல்ல திருமணம் நேற்று சென்னையில் நடந்தது.

சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி-மோகனா தம்பதியினரின் பேரனும், திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளருமான வீ.அன்புராஜ்-சுதா ஆகியோரின் மகனுமான கபிலனுக்கும், கோபாலகிருஷ்ணன்-சுகுணா ஆகியோரின் மகள் மகாலட்சுமிக்கும் சென்னை பெரியார் திடலில் நேற்று திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை கி.வீரமணி நடத்தி வைத்தார். இரு வீட்டார் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினர்.

எந்தவித ஆடம்பரமும் இல்லாமல், அழைப்பிதழ் கூட அச்சிடாமல் இந்த திருமணம் மிக எளிமையாக நடந்தது. வழக்கமாக பெரியார் திடலில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடந்தால் பெரியார் திடலில் ஏராளமான வரவேற்பு ஏற்பாடுகளும், வண்ண மின் விளக்குகள் அலங்காரமும் செய்யப்பட்டிருக்கும். ஆனால் நேற்று எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் திருமணம் நடந்தது.

இத்திருமணம் குறித்தும், திருமணத்துக்கு வந்தோருக்கு வாழ்த்து தெரிவித்தும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வாழ்த்து செய்தி வெளியிட்டு உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

என் பேரன் கபிலன்-மகாலட்சுமி திருமணத்தை நான் நடத்தி வைத்தேன். எங்கள் குடும்பத்தில் நடைபெறும் வாழ்க்கை இணை ஏற்பு விழாக்களுக்கு நாங்கள் அழைப்பிதழ் அச்சிட்டு, முன்னரே விளம்பரங்கள் செய்து, பெருங்கூட்டத்தைச் சேர்த்த விழாவாக அமைப்பதில்லை இதற்குமுன்பும் கூட.

இந்த மணமுறைக்கு ஒப்புதல் அளித்த மணமகளின் பெற்றோர் கோபாலகிருஷ்ணன்-சுகுணா மற்றும் அவர்களது சகோதரர்கள் குடும்பத்தினருக்கு நன்றி கலந்த பாராட்டுகள்.

திராவிடர் கழகத்தை சேர்ந்தோர் குடும்பத்தினர்களிடமும், சந்தித்தவர்களிடமும் தகவல் கூறியும், நம் அமைப்பில் அன்றாடம் உழைப்பவர்கள், சந்திப்பவர்கள் போன்றவர்கள் சூழ இத்திருமணத்தை நடத்துவதின் மூலம், நாம் பிரசாரம் செய்யும் எளிமையை, சிக்கனத்தைச் செயலில் காட்டுதல் முக்கியம் என்பதால், தங்கள் அனைவரின் வாழ்த்துகளையும் இம்மணமக்கள் பெறுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. அந்த உறுதியான எண்ணத்தில், தனித்தனியே அழைக்காததற்கு யாரும் வருத்தப்பட வேண்டாம்.

எதைச் சொல்கிறோமோ அதை நடைமுறையில் செய்து காட்டும் நோக்கம்தான் இதற்கு அடிப்படை. எல்லாவற்றையும் விட மணமக்கள் இதை ஆமோதித்தது எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இக்கொள்கைக்குப் புதிய அறிமுகமான மணமகளின் குடும்பத்தினரும் இதனை மனமுவந்து ஏற்றது எங்களுக்குப் பெரும் வியப்பு, மகிழ்ச்சியும் கூட. அவர்களுக்கு எங்கள் இதயங்கனிந்த நன்றியுடன் கூடிய பாராட்டு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story