வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு சென்னை சுற்று வட்டார பகுதிகளில் முன்னெச்சரிக்கை பணிகள்


வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு சென்னை சுற்று வட்டார பகுதிகளில் முன்னெச்சரிக்கை பணிகள்
x
தினத்தந்தி 1 Sep 2018 8:51 PM GMT (Updated: 1 Sep 2018 8:51 PM GMT)

சென்னை சுற்று வட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தாம்பரம்,

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை காஞ்சீபுரம் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும், உணவு பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளருமான அமுதா ஆய்வு செய்தார். அவருடன் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர்.

சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் உள்ள நாராயணபுரம் ஏரியில் இருந்து நீரை வெளியேற்றும் மதகுகள் அமைத்தல் பணி, சிறுபாலங்கள் அமைக்கும் பணி, கீழ்கட்டளை கால்வாய் தூர்வாரும் பணி மற்றும் பாலப்பணிகள், பெருங்களத்தூர் பாப்பான் கால்வாயில் நடைபெறும் பணிகள், தாம்பரம் அருகே முடிச்சூர் மற்றும் வரதராஜபுரம் பகுதிகளில் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் நடைபெறும் பணிகள் மற்றும் மண்ணிவாக்கம் ஏரி, அடையாறு ஆறு பகுதியில் நடைபெறும் பாலப்பணிகள், நந்திவரம், ஊரப்பாக்கம் பகுதிகளில் நடைபெறும் வெள்ளத்தடுப்பு பணி உள்ளிட்டவைகளை அதிகாரி அமுதா நேரில் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, வெள்ளத்தடுப்பு பணிகளை விரைந்துமுடிக்கவும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பகுதிகளில் உள்ள மண் மற்றும் கட்டிட இடிபாடுகளை அகற்றுதல், கரையை பலப்படுத்துதல் பணியை விரைந்து முடிக்கும்படியும் அலுவலர்களிடம் கூறினார்.

மண்டல அலுவலர்கள் அவரவர் பகுதிகளை பார்வையிடவும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறுபாலங்கள், வெள்ளநீர் வடிகால்வாய்களை சுத்தப்படுத்தவும் அனைத்துத்துறை அலுவலர்களுக்கு அதிகாரி அமுதா அறிவுரை வழங்கினார்.

நீர்நிலைப்பகுதிகளில் பெருமளவு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ள நிலையில் மீதம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறை மூலம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார்.

பின்னர் பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளத்தடுப்பு மற்றும் வடகிழக்கு பருவ மழைக்கான தயார்நிலை குறித்து மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அமுதா தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட கலெக்டர் பொன்னையா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், நகராட்சிகள் மண்டலபொறியாளர் முருகேசன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரம்) ராதாகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் குஜரால், பல்லாவரம் நகராட்சி பொறியாளர் கருப்பையாராஜா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அமுதா கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பொதுப்பணித்துறை சார்பில் 48 பணிகள் ரூ.87.73 கோடியிலும், நெடுஞ்சாலைத்துறை சார்பில் 30 பணிகள் ரூ.83.40 கோடியிலும், பேரூராட்சிகள் துறை சார்பில் 42 பணிகள் ரூ.12.33 கோடியிலும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 77 பணிகள் ரூ.8.59 கோடியிலும் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் 5 பணிகள் ரூ.1.81 கோடியிலும் என மொத்தம் 202 பணிகள் ரூ.193.86 கோடி மதிப்பீட்டில் செய்யப்பட்டு வருகின்றன.

இவற்றில் சிறுபாலங்கள் கட்டுதல், ஏரி, கால்வாய்களை தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல், மதகுகள் அமைத்தல், வெள்ளநீர் வடிகால்வாய்கள் கட்டுதல் போன்ற பணிகள் முதன்மையாக செய்யப்பட்டு வருகின்றது. இந்த பணிகள் நடைபெறுவதை நேரில் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story