ஸ்மார்ட் சிட்டி டெண்டர் முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


ஸ்மார்ட் சிட்டி டெண்டர் முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 2 Sept 2018 4:45 AM IST (Updated: 2 Sept 2018 4:10 AM IST)
t-max-icont-min-icon

ஸ்மார்ட் சிட்டி டெண்டர் முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘ஸ்மார்ட் சிட்டி’ டெண்டர் ஊழலை வெளியிடக்கூடாது என்று ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அமைச்சரவையில் நடைபெற்றுவரும் ஊழல் போட்டியில் முதலிடத்தைப் பிடித்துக்கொண்டுள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பத்திரிகைகளையும், தொலைக்காட்சிகளையும் மிரட்டுவதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் (டுபிட்கோ) 10 ஸ்மார்ட் சிட்டிகளின் ‘மின்னணு நிர்வாகம்’ மற்றும் ‘மொபைல் ஆப்’ உள்ளிட்ட டெண்டரில், அந்த வேலைக்குத் தொடர்பே இல்லாத ‘மெட்டல் ஷீட்’ தயாரிக்கும் நிறுவனத்தைப் பங்கேற்க வைத்து, அந்த டெண்டரை குறிப்பிட்ட தனியார் கம்பெனிக்கு கொடுக்க வேண்டும் என்று ஆணவப்போக்குடன் அதிகாரத் திமிரில் செயல்படுவது மட்டுமின்றி, இப்போது பத்திரிகைகளையும் ஊழல் செய்திகளை வெளியிடக்கூடாது என்று மிரட்டுவதும், எச்சரிப்பதும் கருத்து சுதந்திரத்திற்கு அ.தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்டுள்ள பேராபத்து என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

கண்டுகொள்ளாதது ஏன்?

அமைச்சர் எஸ்.பி.வேலு மணியின் அப்பட்டமான ஊழல், ஸ்மார்ட் சிட்டி டெண்டரில் பொங்கி வழிகிறது. ‘குறைந்த தொகை’ கொடுத்துள்ள கம்பெனிக்கு டெண்டர் வழங்க வேண்டும் என்ற டெண்டர் சட்டவிதிகளை மீறி, அதிக தொகை போட்டுள்ள கோவையைச் சேர்ந்த தனியார் கம்பெனிக்கு ஸ்மார்ட் சிட்டி பணிகளை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே ஸ்மார்ட் சிட்டி டெண்டரில் இவ்வளவு குளறுபடிகளை அமைச்சர் திட்டமிட்டு நடத்துகிறார்.

இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகமும் அமைதி காப்பது ஏன்? ‘ஸ்மார்ட் சிட்டி திட்டம்’ பிரதமரின் முன்னோடித் திட்டமாக இருந்த போதிலும் இத்திட்டத்தை கண்காணிக்கும் பிரதமர் அலுவலகம், தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்ட டெண்டர்களில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? என்பன போன்ற கேள்விகள் எல்லாம் வரிசையாக எழுகின்றன.

சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு

ஆகவே, நான் ஏற்கனவே கோரிக்கை வைத்தபடி ‘நேர்மையான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி’ ஒருவர் தலைமையில் டுபிட்கோ ஸ்மார்ட் சிட்டி டெண்டர் மட்டுமின்றி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கட்டுப்பாட்டில் உள்ள துறையில் இதுவரை விடப்பட்டுள்ள அனைத்து டெண்டர்களையும் விசாரிக்க ஒரு ‘சிறப்பு விசாரணைக் குழு’ அமைத்து, லஞ்ச ஊழல் தடுப்புத்துறை அமைச்சர் வேலுமணி மீதும், அவருக்குத் துணைபோன ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

ஏற்கனவே, தன் துறையில் தன் உறவினருக்கே காண்டிராக்டுகளை வழங்கிய ஊழல் வழக்கு விசாரணையை சந்தித்துக் கொண்டிருக்கும் முதல்-அமைச்சரால், அமைச்சர் வேலுமணியின் துறை டெண்டர்களை விசாரிக்க முடியாது என்றால், மத்திய அரசு நிதியும் இதில் இருக்கின்ற காரணத்தால் தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டி டெண்டர்களில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Next Story