நெல் கொள்முதல் நிலையங்களை மாநில அரசே சொந்த செலவில் நடத்த வேண்டும்


நெல் கொள்முதல் நிலையங்களை மாநில அரசே சொந்த செலவில் நடத்த வேண்டும்
x
தினத்தந்தி 2 Sept 2018 8:15 PM (Updated: 2 Sept 2018 7:48 PM)
t-max-icont-min-icon

மத்திய அரசு உத்தரவு குறித்து விளக்கம் அளிப்பதுடன் நெல் கொள்முதல் நிலையங்களை மாநில அரசே சொந்த செலவில் நடத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முழுவதும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூட மத்திய அரசு ஆணை பிறப்பித்திருப்பதாகவும், அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1-ந் தேதி முதல் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது உண்மை என்றால் கண்டிக்கத்தக்கது. விவசாயிகளுக்கு இதைவிட மோசமான துரோகத்தை இழைக்க முடியாது.

நாகை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 112 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நேற்று முதல் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களை மூடும்படி தமிழக அரசுக்கு மத்திய அரசு ஆணையிட்டதன் அடிப்படையில் இவ்வாறு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்துள்ள விவசாய அமைப்புகள் செப்டம்பர் 3-ந் தேதி (இன்று) போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசு இதுபற்றி விளக்கம் அளிக்காமல் அமைதி காப்பது சரியல்ல.

நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை தனியார் வணிகர்களிடம் தான் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். வணிகர்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக்கொண்டு நெல் உள்ளிட்ட விளைபொருட்களை அடிமாட்டு விலைக்கு வாங்குவர். அதனால் தான் நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படுவதை விவசாயிகளை அழிக்கும் சதி என்று குற்றம்சாட்டுகிறேன்.

நெல் கொள்முதல் நிலையங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். மத்திய அரசே அவ்வாறு ஆணையிட்டிருந்தாலும் தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி மாநில அரசே அதன் சொந்த செலவில் நெல் கொள்முதல் நிலையங்களை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதேபோல், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு, நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசிடம் இருந்து நிதி பெற முடியவில்லை என்றால் மாநில அரசு தன்னுடைய நிதியில் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்கு முன்வர வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது” என்று கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேரடி கொள்முதல் நிலையங்களை மூடுவது என்ற அரசின் முடிவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசின் முடிவை திரும்ப பெற்று அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து இயங்கவும், விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்யவும், அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

Next Story