மின்சாரம் திருடுபவர்கள் மீது நடவடிக்கை போலீசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


மின்சாரம் திருடுபவர்கள் மீது நடவடிக்கை போலீசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 5 Sept 2018 3:23 AM IST (Updated: 5 Sept 2018 3:23 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சிலை வைப்பதற்காக மின்சாரம் திருடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், அவற்றை கரைப்பதற்கும் பல்வேறு நிபந்தனைகளை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதன்படி விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி பெறுவதற்கு பல்வேறு துறைகளின் முன்அனுமதி, தடையில்லா சான்று பெறவேண்டும்.

வருகிற 13-ந் தேதி விநாயகர் சதுர்த்தி என்பதால், குறுகிய காலத்தில் அரசாணையில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாது என்றும், இந்த அரசாணையை ரத்துசெய்ய வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம கோபாலன் உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், ‘விநாயகர் சிலை வைப்பதற்கு முன்பு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டரிடம் அனுமதி பெறவேண்டும். ஆனால் புதிய நிபந்தனைகளின்படி, மாநகரங்களில் துணை போலீஸ் கமிஷனரிடமும், பிற மாவட்டங்களில் துணை போலீஸ் சூப்பிரண்டிடமும் அனுமதி பெறவேண்டும். துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் பல கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும். அவரது அலுவலகத்துக்கு சென்று விண்ணப்பம் செய்ய கிராமப்புற மக்களுக்கு பொருளாதார வசதிகள் இல்லை’ என்று வாதிட்டனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து விநாயகர் சிலை வைப்பவர்களுக்கு, அதற்கு அனுமதி பெற போலீஸ் அதிகாரி அலுவலகம் செல்ல முடியாதா?’ என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர் மனுதாரர்கள் வக்கீல்கள், ‘விநாயகர் சிலை வைக்கும் இடத்துக்கு மின்சார இணைப்பு தற்காலிகமாக வாங்கவேண்டும் என்று கூறுகின்றனர். இதற்காக மின்சார வாரியத்திடம் ரூ.50 ஆயிரம் முன்பணம் செலுத்த முடியாது. வீடு, கடைகளில் இருந்து மின்சாரம் பெறுவதற்கும் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன’ என்று கூறினர்.

அதற்கு பதில் அளித்த அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், ‘வீடு, கடைகளில் இருந்து மின்சார இணைப்பு பெற்றால், அதன் உரிமையாளர்களிடம் இருந்து அனுமதி கடிதம் பெறவேண்டும். அதில், அவர்களது மின்சார இணைப்பின் எண் குறிப்பிட்டிருக்க வேண்டும். அதன்படி, மின்சார வாரியம் ஒப்புதல் வழங்கும்’ என்றார்.

அப்போது நீதிபதி, ‘விநாயகர் சிலை வைப்பதற்கு மின்சாரத்தை கொக்கிபோட்டு திருடுவதை ஒருபோதும் ஏற்கமுடியாது. அவ்வாறு மின்சாரம் திருடும் நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றார். பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று (புதன்கிழமை) பிறப்பிப்பதாக நீதிபதி கூறினார்.

Next Story