மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணத்துக்கு சம்பந்தம் இல்லாத கேள்விகளை கேட்டனர் சசிகலா தரப்பு வக்கீல்கள் மீது ஜெ.தீபா குற்றச்சாட்டு + "||" + Jayalalithaa death Unreachable Asked questions On the advocacy side advocates J.Deepa charge

ஜெயலலிதா மரணத்துக்கு சம்பந்தம் இல்லாத கேள்விகளை கேட்டனர் சசிகலா தரப்பு வக்கீல்கள் மீது ஜெ.தீபா குற்றச்சாட்டு

ஜெயலலிதா மரணத்துக்கு சம்பந்தம் இல்லாத கேள்விகளை கேட்டனர் சசிகலா தரப்பு வக்கீல்கள் மீது ஜெ.தீபா குற்றச்சாட்டு
ஜெயலலிதா மரணத்துக்கு சம்பந்தம் இல்லாத கேள்விகளை குறுக்கு விசாரணையின் போது கேட்டதாக சசிகலா தரப்பு வக்கீல்கள் மீது ஜெ.தீபா குற்றம்சாட்டினார்.
சென்னை,

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதா மரணம் குறித்து ஏற்கனவே வாக்குமூலம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா குறுக்கு விசாரணைக்காக தனது வக்கீல் தொண்டன் சுப்பிரமணியுடன் நேற்று ஆணையத்தில் ஆஜரானார்.

அதேபோன்று, தி.மு.க. மருத்துவர் அணி துணைச் செயலாளர் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆனூர் ஜெகதீசன், மதுரை பாலன், வருமான வரித்துறை அதிகாரி பாலமுருகன், ஜோசப் ஆகியோரும் ஆஜராகினர். அவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல்கள் ராஜாசெந்தூர்பாண்டியன், அரவிந்தன் ஆகியோர் குறுக்கு விசாரணை நடத்தினார்.

குறுக்கு விசாரணை முடிந்து வெளியே வந்த ஜெ.தீபா, அ.தி.மு.க. தொண்டர்கள் தனது வீட்டின் முன்பு கூடியது தொடர்பாகவும், ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தது குறித்தும் சசிகலா தரப்பு வக்கீல்கள் என்னிடம் கேள்வி கேட்டனர். ஜெயலலிதா மரணத்துக்கு சம்பந்தமில்லாத அரசியல் தொடர்பான பல கேள்விகளை அவர்கள் கேட்டனர். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த தீவிர சிகிச்சை பிரிவு வார்டு இடித்து கட்டப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் நல்ல முறையில் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இதே முறையில் விசாரணை நடந்தால் நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று கூறினார்.

மருத்துவர் சரவணன் கூறும்போது, ‘தேர்தல் படிவங்களில் பதியப்பட்ட ஜெயலலிதா கைரேகையில் பல சந்தேகங்கள் உள்ளன. அந்த கைரேகை உயிரோடு இருக்கும்போது பதியப்பட்ட கைரேகை போன்று தெரியவில்லை. தனியார் தடயவியல் பரிசோதனை மையத்தின் மூலம் தேர்தல் படிவத்தில் பதியப்பட்ட ஜெயலலிதாவின் கைரேகையை பரிசோதித்தபோது அதில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதை அந்த மையம் அளித்த அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இந்த அறிக்கையை ஏற்கனவே ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளேன். இருந்தபோதிலும் இதுதொடர்பாக சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணையின் போது எந்த கேள்வியும் எழுப்பவில்லை. ஜெயலலிதா கைரேகை குறித்து எழுப்பிய சந்தேகத்தில் மாற்றம் இல்லை’ என்றார்.

முன்னாள் எம்.எல்.ஏ. ஆனூர் ஜெகதீசன், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க தடையாக இருந்தவர்கள் யார் என்பதை கண்டறிந்து ஜெயலலிதாவின் மரணத்தில் நடந்தது என்ன என்பதை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.

சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் கூறும்போது, ‘ஜெயலலிதா கைரேகை விவகாரத்தில் எந்த மர்மமும் இல்லை. மருத்துவ ஆவணங்களை பொறுத்தவரை ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்யப்பட்ட போது கைரேகை வைக்கும் அளவுக்கு அவர் உடல்நலத்துடன் இருந்தார் என்பது தெளிவாக உள்ளது. மருத்துவர் சரவணன் காழ்ப்புணர்ச்சியுடன் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்து விசாரணை நடத்தினால் ஆணையத்தின் அனைத்து கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி கிடைக்கும்’ என்றார்.

ஆசிரியரின் தேர்வுகள்...