மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாஸை சந்தித்த தி.மு.க. எம்.எல்.ஏ

சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாஸை தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சந்தித்தார்.
சென்னை,
முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அவதூறாக பேசியது உள்ளிட்ட வழக்குகளில் எம்எல்ஏவும் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவருமான கருணாஸ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருக்கு அண்மையில் எழும்பூர் கோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதைத்தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலையானார் கருணாஸ்.
இந்நிலையில் கருணாஸ் கடந்த ஆண்டு புலித்தேவன் பிறந்தநாளன்று மோதலில் ஈடுபட்டதாக நெல்லை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கில் அவரை கைது செய்ய நெல்லை போலீஸார் நேற்றிரவு சென்னை வந்தனர்.
பின்னர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள கருணாஸ் வீட்டுக்கு சென்ற நிலையில் அவர் இல்லாததால் போலீஸார் ஏமாற்றமடைந்னர். இந்நிலையில் கருணாஸ் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாஸை தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.அன்பழகன், தமிழக அரசும் காவல்துறையும் பழைய வழக்குகளை எடுத்து பழிவாங்கும் நோக்கில் கருணாஸ் மீது நடவடிக்கை எடுத்துவருகிறது. சபாநாயகரை நீக்க கோரி கருணாஸ் அளித்த மனுவிற்கு தி.மு.க நிச்சயம் ஆதரவு அளிக்கும் எனவும் அதுகுறித்து தி.மு.க பரிசீலனை செய்யும் எனவும் ஜெ.அன்பழகன் தெரிவித்தார்.
கருணாஸை திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story






