தமிழ்நாடு நீர்வள ஆதாரங்கள் பாதுகாத்தல், நதிகள் சீரமைப்பு கழகம் உருவாக்கம் தமிழக அரசு அரசாணை வெளியீடு


தமிழ்நாடு நீர்வள ஆதாரங்கள் பாதுகாத்தல், நதிகள் சீரமைப்பு கழகம் உருவாக்கம் தமிழக அரசு அரசாணை வெளியீடு
x
தினத்தந்தி 9 Oct 2018 9:30 PM GMT (Updated: 9 Oct 2018 9:03 PM GMT)

‘தமிழ்நாடு நீர் வள ஆதாரங்களை பாதுகாத்தல், நதிகள் சீரமைப்பு கழகம்’ உருவாக்கம் செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

சென்னை,

தமிழக பொதுப்பணித்துறையில் கட்டிடம் மற்றும் நீர்வள ஆதாரப் பிரிவு என 2 பிரிவுகளாக பிரித்து பணிகள் நடந்து வருகிறது. இதில் கட்டிட பிரிவு பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கட்டிடங்களை பராமரித்தல், அரசு துறைகளுக்கு தேவையான புதிய கட்டிடங்களை கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

நீர்வள ஆதாரப் பிரிவு அணைகள், ஏரிகள் புனரமைத்தல், அணைகள் கட்டுதல், நீர்நிலைகளை பாதுகாத்தல் போன்ற பணிகளை செய்து வருகிறது.

சென்னை, கோவை, திருச்சி, மதுரை மண்டல தலைமை பொறியாளர்களின் கண்காணிப்பின் கீழ் பொறியாளர்கள் மூலம் திட்டப்பணிகள் நடந்து வருகிறது.

அரசாணை வெளியீடு

இந்தநிலையில் தமிழ்நாடு நீர் வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகளை சீரமைக்கும் பணிகளை செயல்படுத்த ‘தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகள் சீரமைப்பு கழகம்’ என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி, தமிழக அரசு அரசாணை பிறப்பித்து உள்ளது.

இந்த கழகத்திற்கு என்று தனியாக முதன்மை செயலாளர் தலைமையிலான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நிலையிலான அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

இதில் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை, மாநில நீர்வள மேலாண்மை முகமை இணைக்கப்படுகிறது. இதன் மூலம் கூவம், அடையாறு, ஆறுகள் புனரமைப்பு பணிகள் இந்த கழகம் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

ரூ.6 ஆயிரம் கோடியில் பணிகள்

மத்திய அரசு, உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி மூலம் செயல்படுத்தப்படும் பெரிய அளவிலான நீர்வளத்துறை பணிகளை இந்த கழகம் செயல்படுத்தும். அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.6 ஆயிரம் கோடி செலவில் நீர்வளத்துறை திட்ட பணிகள் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இதன் மூலம் நதிகள் இணைப்பு திட்டம், கால்வாய்கள் இணைப்பு திட்டம், பருவநிலை மாற்றம், பாசன உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவது, வெள்ள தடுப்பு திட்டப்பணிகள், அணைகள், ஏரிகள் மின் உற்பத்தி நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான அரசாணையை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்து உள்ளார்.

விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆறுகள் சீரமைப்பு மேம்பாட்டுக் கழகம் அமைக்க அரசாணை வெளியிட்டது அதிர்ச்சியளிக்கிறது. இதனை ரத்து செய்துவிட்டு பாசனத்திற்கு என்று தனித்துறையை ஏற்படுத்த வேண்டும். காவிரியின் குறுக்கே ராசி மணல் அணை கட்டுமானப்பணியை உடனே தொடங்க வேண்டும்’ என்று கூறி உள்ளார்.

Next Story