ஆண்டுக்கு ஒருமுறை தொழிலாளர்களின் ஊதியத்தை ஏன் உயர்த்தக்கூடாது? மத்திய அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி


ஆண்டுக்கு ஒருமுறை தொழிலாளர்களின் ஊதியத்தை ஏன் உயர்த்தக்கூடாது? மத்திய அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 3 Nov 2018 4:45 AM IST (Updated: 3 Nov 2018 2:24 AM IST)
t-max-icont-min-icon

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப தொழிலாளர்களின் ஊதியத்தை ஆண்டுக்கு ஒருமுறை ஏன் உயர்த்தக்கூடாது? என்று மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை,

குஜராத் மாநிலத்தை சேர்ந்த பசிபிகா உட்கட்டமைப்பு என்ற தனியார் நிறுவனம் சென்னையில் ஒப்பந்த பணிகளை செய்து வந்தன. இந்த நிறுவனத்தில் விக்னேஷ் என்பவர் வெல்டராக வேலை செய்து வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு வேலை செய்யும்போது, 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து விக்னேஷ் பலியானார்.

இதையடுத்து, அவரது பெற்றோர் ராஜரத்தினம், சரஸ்வதி, சகோதரி ஜானகி ஆகியோர் இழப்பீடு கேட்டு சென்னையில் உள்ள தொழிலாளர் நல ஆணையத்தில் முறையிட்டனர். இவர்களது கோரிக்கையை பரிசீலித்த தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் ரூ.8 லட்சத்து 95 ஆயிரத்து 840 இழப்பீடாக 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும், தவறினால் 12 சதவீத வட்டியுடன் அந்த தொகையை கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த இழப்பீடு தொகை போதாது என்றும், இழப்பீடு அதிகமாக வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் ராஜரத்தினம், சரஸ்வதி, ஜானகி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தொழிலாளர்கள் இழப்பீடு சட்டத்தின் கீழ், தொழிலாளர்களின் குறைபட்ச ஊதியம் மாதம் ரூ.8 ஆயிரம் என்று கடந்த 2010-ம் ஆண்டு மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. அதன்பின்னர், கடந்த 8 ஆண்டுகளாக விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தாமல் அரசு உள்ளது.

தற்போது விபத்தில் பலியான விக்னேஷ் வெல்டராக பணி செய்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில், வெல்டர் பணிக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.16 ஆயிரத்து 704 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இழப்பீடாக ரூ.18 லட்சத்து 60 ஆயிரத்து 73 ஆக உயர்த்துகிறேன். இந்த தொகையை, விபத்து நடந்த நாளில் இருந்து 12 சதவீத வட்டியுடன் வழங்கவேண்டும்.

மேலும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ஆண்டுக்கு ஒரு முறை ஏன் உயர்த்தக்கூடாது?, தொழிலாளர்களின் இழப்பீட்டு தொகையை ஏன் அதிகரிக்கக்கூடாது? என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு மத்திய அரசு வருகிற டிசம்பர் 2-ந் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Next Story