மேகதாது அணை கட்டுவது பற்றி ஆய்வு செய்யவே மத்திய அரசு அனுமதி; தமிழிசை சவுந்தரராஜன்


மேகதாது அணை கட்டுவது பற்றி ஆய்வு செய்யவே மத்திய அரசு அனுமதி; தமிழிசை சவுந்தரராஜன்
x
தினத்தந்தி 1 Dec 2018 5:51 PM IST (Updated: 1 Dec 2018 5:51 PM IST)
t-max-icont-min-icon

மேகதாது அணை கட்டுவது பற்றி ஆய்வு செய்யவே மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னை,

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக அனைத்து கட்சி கூட்டத்திற்கு தி.மு.க. சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த கூட்டத்தில் தி.மு.க. தோழமை கட்சிகள் மட்டும் கலந்து கொண்டன. கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொருளாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் மேகதாது அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், மேகதாது பிரச்சினையில் உடனடியாக தமிழக சட்டமன்றத்தினுடைய சிறப்பு கூட்டத்தினை கூட்ட வேண்டும். சட்டசபையில் சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த அடிப்படையில் வருகின்ற டிசம்பர் 4-ந்தேதி திருச்சியில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கக்கூடிய வகையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தவிருக்கிறோம் என கூறினார்.

இந்த நிலையில், மாநில பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்பொழுது, மேகதாது விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டம் கண்துடைப்பு நாடகம்.  மேகதாது அணை கட்டுவது தொடர்பாக ஆய்வு செய்ய மட்டுமே மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் குற்றம் சாட்டுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

Next Story