திருச்சியில் தி.மு.க. தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது


திருச்சியில் தி.மு.க. தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது
x
தினத்தந்தி 3 Dec 2018 11:00 PM GMT (Updated: 2018-12-04T02:37:49+05:30)

காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி திருச்சியில் இன்று தி.மு.க. தோழமை கட்சிகள் சார்பில் மு.க.ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

திருச்சி,

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக மாநில அரசு அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. மேலும் அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு உள்ளது. காவிரியின் குறுக்கே அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு காவிரி நீர் வருவது ஒட்டுமொத்தமாக தடுத்து நிறுத்தப்பட்டு விடும். இதனால் டெல்டா மாவட்டங்களில் ஒரு போகம் கூட நெல் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்படும் என்பதால் தமிழகத்தில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. விவசாய சங்கங்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் கடந்த மாதம் நடைபெற்ற தி.மு.க. தோழமை கட்சிகள் கூட்டத்தில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதற்கு மத்திய அரசு வழங்கிய அனுமதியை உடனே ரத்து செய்யக்கோரி டிசம்பர் 4-ந் தேதி திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இன்று கண்டன ஆர்ப்பாட்டம்

இந்த முடிவின்படி திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு தி.மு.க. தோழமை கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் தோழமை கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், பிரமுகர்கள் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.

கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள உழவர் சந்தை மைதானத்தில் தலைவர்கள் பேசுவதற்கு வசதியாக மேடை அமைக்கப்பட்டு உள்ளது.

Next Story