குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்ற தாய்-மகளுக்கு ஒரே நேரத்தில் அரசு வேலை கிடைத்தது


குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்ற தாய்-மகளுக்கு ஒரே நேரத்தில் அரசு வேலை கிடைத்தது
x
தினத்தந்தி 2 March 2019 1:33 AM IST (Updated: 2 March 2019 1:33 AM IST)
t-max-icont-min-icon

குரூப்-4 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற தேனியை சேர்ந்த தாய், மகள் இருவருக்கும் ஒரே நேரத்தில் அரசு வேலை கிடைத்து உள்ளது.

தேனி,

தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி சாந்திலட்சுமி (வயது 48). இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் தேன்மொழி (27). கடந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப்-4 தேர்வை சாந்திலட்சுமியும், தேன்மொழியும் ஒரே நேரத்தில் எழுதினர். இதில் இருவரும் தேர்ச்சி பெற்றனர்.

இந்தநிலையில் அவர்கள் இருவருக்கும் தற்போது அரசு வேலை கிடைத்து உள்ளது. இதுகுறித்து சாந்திலட்சுமியிடம் கேட்டபோது, ‘எனது கணவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். நான் 2012-ம் ஆண்டில் இருந்தே டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் பங்கேற்று வந்தேன். தேனியில் திண்ணை மனிதவள மேம்பாட்டு அமைப்பு நடத்தி வரும் இலவச பயிற்சி வகுப்பில் நானும், எனது மகள் தேன்மொழியும் கடந்த ஆண்டு பயிற்சி பெற்றோம். தேர்வு எழுதியபிறகு நம்பிக்கையோடு காத்திருந்தோம்.

நேர்முகத் தேர்வுக்கு பிறகு தற்போது எங்கள் இருவருக்கும் வேலை கிடைத்து உள்ளது. எனக்கு பொது சுகாதாரத்துறையிலும் (மருந்தகம்), என் மகளுக்கு இந்துசமய அறநிலையத்துறையிலும் இளநிலை உதவியாளர் (தட்டச்சர்) பணி கிடைத்து உள்ளது. இது மிகவும் மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது. என் மகளுக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் முடிந்தது. இன்னும் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. விரைவில் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார்.

ஒரே நேரத்தில் அரசு வேலை பெற்ற இருவருக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, திண்ணை பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளரும், அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியின் தமிழாசிரியருமான செந்தில்குமார் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story