தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்? இறுதி முடிவு இன்று வெளியாக வாய்ப்பு


தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்? இறுதி முடிவு இன்று வெளியாக வாய்ப்பு
x
தினத்தந்தி 3 March 2019 5:00 AM IST (Updated: 3 March 2019 4:56 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கீடு? என இன்று இறுதி முடிவு வெளியாக வாய்ப்பு உள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் பா.ஜ.க., பா.ம.க., புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் கூட்டணி ஏற்பட்டு உள்ளது. தே.மு.தி.க. வையும், த.மா.கா.வையும் கூட்டணியில் சேர்க்க அ.தி.மு.க. முயற்சி எடுத்து வருகிறது.

அதேசமயம் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை அங்கம் வகிக்கின்றன. இதில் புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்பு உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று காலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் சென்று சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்பின்போது கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலின்போது ஒதுக்கப்பட்டது போலவே 2 தொகுதிகள் வேண்டும் என்று தொல்.திருமாவளவன் கேட்க இருக்கிறார். சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளையே அவர் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி தொகுதி பங்கீடும் இன்று இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.

தே.மு.தி.க.வுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இதர கட்சிகளுக்கு தொகுதிகள் பிரிக்கும் பணிகளை நிறைவு செய்ய தி.மு.க. விரும்புகிறது. ம.தி.மு.க.வுக்கும் விரைவில் அழைப்பு விடுக்கப்பட உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு உள்ளது. மீதமுள்ள 20 தொகுதிகளில் காங்கிரசுக்கு 10 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. மீதம் 8 இடங்கள் மட்டுமே பாக்கி உள்ளன.

இந்த இடங்களை தான் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு பிரித்து கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தி.மு.க. உள்ளது. பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சியும் திடீரென தி.மு.க. கூட்டணிக்கு வந்திருக்கிறது. இதனால் 5 கட்சிகளுக்கு 8 இடங்கள் பிரிக்கப்பட இருக்கிறது.

Next Story